
ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இன்றைய அரசியலில் வருவோர் போவோர் எல்லாம் தலைவர் ஆகிவிடுகின்றனர். கையில் மைக்கை வைத்துக் கொண்டு, வெள்ளைச் சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால், அவர்களும் தலைவர்கள் ஆகிவிடுகின்றனர். ஆனால், இதே தமிழகத்தில்தான் காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் இருந்தனர்.
நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றத்தை முதலில் உங்களுக்குள் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். உங்களின் பதவி ஒன்றும் உங்கள் அதிகாரத்தைத் தீர்மானிக்காது; உங்களின் செயல்களே தீர்மானிக்கும். எந்தப் பதவியானாலும். ஒருநாள் இல்லாமல்தான் போகும். அதுதான் இயல்பு. தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டால், உங்களுக்கான பதவியே உங்களைத் தேடி வரும்.
அதிகாரத்துக்கு வந்ததும் தன்னை அவமதித்தவர்களைக்கூட பழிவாங்கும் எண்ணாமல் இருப்பவர்தான் சிறந்த தலைவராக வருவார் என்று பிரதமர் மோடி கூறுவார். அதிகாரத்துக்கு வந்தவுடன், அவமதித்தவர்களின் செல்போனை ஒட்டுக்கேட்பது, பழிவாங்குவது போன்றவற்றைச் செய்தல் கூடாது. ஓர் அரசியல்வாதிக்கு பழிவாங்கும் போக்கு இருக்கலாம்; ஆனால், ஒரு தலைவனுக்கு அது இருத்தல் கூடவே கூடாது.
இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள் எதனையும் செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு கட்சித் தலைவர் மாடுகளின் முன்பாக பேசுகிறார். மாடுகளெல்லாம் வாக்குரிமை கேட்கிறதா? இன்னொருவர் மரம் ஏறுகிறார் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!