
இந்தியா ஒரு வேளாண் நாடு. அரிசி, பால், மசாலா ஆகிய பொருள்களின் உற்பத்தியில் டாப் இடங்களைப் பிடித்துள்ளது இந்தியா.
ஆனால், உற்பத்திக்குப் பிறகு, இந்தப் பொருளைப் பாதுகாப்பதற்கான போதுமான கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. இதனால், பல்வேறு பொருள்கள் வீணாகின்றன.
இந்த வீண்களைக் குறைக்கத் தான் மத்திய அரசு வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் ரூ.2 கோடி வரை சொத்து பிணையம் இல்லாமல் கடன் பெறலாம்.

இந்தத் திட்டம் குறித்து நமக்கு விளக்கமாக எடுத்துரைக்கிறார் தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய்.
எந்தத் துறைக்கு?
வேளாண் உற்பத்தித் துறை சார்ந்த தொழில்களுக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் ரூ.2 கோடி வரை எந்தச் சொத்து பிணையமும் இல்லாமல் கடன் கிடைக்கும்.
இந்தக் கடனுக்கான வட்டி 6 சதவிகிதம் ஆகும். ஆனால், அதில் 3 சதவிகித வட்டியை அரசாங்கமே தள்ளுபடி செய்துவிடுகிறது.
இந்தக் கடனை ஏழு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.
மூலதனம் எவ்வளவு இருக்க வேண்டும்?
மூலதனமாக நாம் 10 சதவிகிதத்தை முதலீடு செய்தால் போதும். மீதம் வேண்டிய 90 சதவிகிதம் கடனாகவே கிடைத்துவிடும்.
இதுவே மற்ற கடன்களாக இருந்தால், 20 – 25 சதவீதம் நாம் மூலதனமாக முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். அதனால், இந்தக் கடனை வாடிக்கையாளர் ஃபிரெண்ட்லி என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?
விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs)
வேளாண் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப்கள்
முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (PACS) மற்றும் பிற கூட்டுறவு சங்கங்கள்
சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs)
சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள்
மாநில முகமைகள் மற்றும் மத்திய அல்லது மாநில அரசின் ஆதரவுடன் இயங்கும் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) திட்டங்கள்
எந்த மாதிரியான திட்டங்களுக்கு இந்த மானியம் பெற முடியும்?
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை: கிடங்குகள், தானியக் களஞ்சியங்கள், பேக்ஹவுஸ்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் குளிர்பதனச் சங்கிலிகள்.
தளவாடங்கள்: ரீஃபர் வேன்கள் மற்றும் பிற வெப்பத்தடுப்பு செய்யப்பட்ட வாகனங்கள்.
பதப்படுத்தும் அலகுகள்: முதன்மை பதப்படுத்தும் மையங்கள், தரம் பிரித்தல், தரப்படுத்துதல் மற்றும் மதிப்பாய்வு அலகுகள்.
ஸ்மார்ட் விவசாயம்: தனிப்பயன் வாடகை மையங்கள், ட்ரோன்கள் மற்றும் சென்சார் அடிப்படையிலான உள்கட்டமைப்பு.
சமூக விவசாய சொத்துக்கள்: இயற்கை உள்ளீடு உற்பத்தி, ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் செங்குத்து விவசாயம்.
மில், உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
முதலில், உங்களுக்கு விருப்பமான வங்கியிடம் கடன் குறித்து பேசுங்கள்.
அவர்கள் ஒப்புதல் அளித்த பின், திட்டத்தின் செலவுகள் மற்றும் வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க வேண்டும். அதற்கான மாதிரி விரிவான திட்ட அறிக்கைகள் AIF போர்ட்டலிலேயே கிடைக்கின்றன.
அதிகாரப்பூர்வ AIF போர்ட்டலில் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரு பயனாளியாகப் பதிவு செய்துகொள்ளவும்.
அடுத்து, AIF போர்ட்டலில் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும், தயாரித்து வைத்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும்.
வங்கி 60 நாள்களுக்குள் அந்தத் திட்டத்தை மதிப்பிடும்.
பின் வங்கிகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கடன் வழங்கியதும், அரசாங்கம் வட்டித் தள்ளுபடியை நேரடியாக வங்கிக்கு கொடுத்துவிடும்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…