
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியான `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது.
மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

`வேள்பாரி’தான் ஞாபகத்துக்கு வந்தது!
நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர், “ஆனந்த விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஒருமுறை என்னிடம், `ஆனந்த விகடனில் `வேள்பாரி’ என்று ஒரு நாவல் வாரா வாரம் வந்துகொண்டிருக்கிறது. அதைப் படித்தால் படம் பார்க்கிற மாதிரியே இருக்கிறது. நீங்கள் படம் எடுத்தால் நன்றாக இருக்கும்’ என்றார்.
நான் வெளியில் கதைகள் பண்ணுவதில்லை என்பதாலும், படிக்க நேரமில்லை என்பதாலும் `பார்க்கிறேன் சார்’ என்று சொல்லியிருந்தேன்.
கொரோனா நேரத்தில் புத்தகங்கள் படிக்கலாம் என்று முடிவு செய்தபோது, `வேள்பாரி’தான் ஞாபகத்துக்கு வந்தது.
`சரி, வேள்பாரி படிக்கலாம்’ என்று புத்தகத்தைத் தேடினால், எங்கேயும் ஒரு பிரதிகூடக் கிடைக்கவில்லை. பின்னர், சு.வெங்கடேசன், தான் வைத்திருந்த பிரதியை அனுப்பினார்.
காட்சிகள் விரிந்துகொண்டேயிருக்கின்றன!
நாவல்கள் பெரும்பாலும் உணர்வுகளாகத்தான் விரியும். ஆனால், வேள்பாரி விஷுவல்களுடன் விரிகிறது. சில்அவுட்டில் அறிமுகமாகும் பாரியில் ஆரம்பித்து, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தோன்றுகின்ற ஒளிவாள், வட்டாற்று மணல்களில் வருகின்ற ஆயிரம் யானைப்படைகள் எனக் காட்சிகள் விரிந்துகொண்டேயிருக்கின்றன.
கபிலரின் விருந்துக் காட்சி எனக்கு உண்மையிலேயே பின்னணியில் ஒரு பாடலாக ஓடுகிறது. ஒரு மதம்கொண்ட யானையை, குழந்தையை மார்பில் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி அசால்ட்டாக பின்னாடி தூக்கிப் போட்டுக்கொண்டு, ஒரு மூலிகைச்செடியைக் காட்டி யானையை மண்டியிடவைத்து காட்டுக்குள் ஓடவிடுவார்.
பரம்பு ஆசான் தேக்கன் இறந்ததும் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடுகின்ற கூவல்குடி வீரன் விதவிதமான ஒலிகளை எழுப்பி, அந்தக் காட்டில் இருக்கும் பூச்சி, பறவை, நாய், தவளை எல்லாவற்றுக்கும் தெரிவிக்கிறான்.
அவை அத்தனையும் சோகத்தோடு ஒரே நேரத்தில் குரல் எழுப்புவது அற்புதமான இடம்.
இதை நான் எங்கும் கேள்விப்பட்டதும் இல்லை, படித்ததும் இல்லை. இதுவரைக்கும் வராத ஒரு சோகப்பாடல் சிச்சுவேஷன் அது.

ஏகப்பட்ட விஷயங்களை சு.வெங்கடேசன் அருமையாக எழுதியிருக்கிறார். பூமிக்கு அடியில் விலையுயர்ந்த மணி, கற்களை சேமித்துவைக்கின்ற இடத்தை `பாழி நகர்’ என்று சொல்வது மாதிரி, தனக்குள் விலை மதிப்பில்லாத அறிவையும் படைப்புத்திறனையும் சேமித்துவைத்திருக்கின்ற `பாழி நகர்’ என்று இவரைச் சொல்லலாம்.
அற்புதமான ஓவியங்களை வரைந்த மணியம் செல்வனுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கல்கிக்கு `பொன்னியின் செல்வன்’ மாதிரி ஆனந்த விகடனுக்கு `வேள்பாரி.’ `பொன்னியின் செல்வன்’ மாதிரி `வேள்பாரி’யின் புகழ் இன்னும் 50 ஆண்டுகள் தாண்டி நிலைத்திருக்கும்.
அறம் என்றால் அறுக்கிறதுதானே என்று கேள்வி கேட்கும் காலகட்டம் இது. ஆனால், அறம் என்றால் என்ன, இயற்கை முக்கியத்துவம் என்றால் என்ன என்பதை இந்தத் தலைமுறைக்குப் புரிகின்ற மாதிரி எழுதியிருக்கிறார் வெங்கடேசன்.
இதைப் பாடப்புத்தகமாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். முதலில் என்னுடைய கனவுப் படமாக இருந்தது `எந்திரன்.’
இப்போது என்னுடைய கனவுப் படம் `வேள்பாரி.’ எப்போது ஒரு பெரிய படத்தை எடுத்தாலும், `சந்திரலேகா’ மாதிரி பிரமாண்டமாக இருக்கும் என்று சொல்வார்கள்.

ஆனால், உண்மையிலேயே `சந்திரலேகா’வுக்கு மேலேயும் ஒரு படமாக `வேள்பாரி’ வரும் என்று நம்புகிறேன்.
எஸ்.எஸ்.வாசன் ஐயா இருந்திருந்தால் அவரே இதைப் படமாகத் தயாரித்திருப்பார்.
இன்னும் புதுப் புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தக்கூடிய கதையாக இருக்கிறது `வேள்பாரி.’
`கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, `அவதார்’ மாதிரி உலகம் போற்றக்கூடிய அறிவுபூர்வமான, ஜனரஞ்சகமான காவியமாக, ஒரு பெருமைமிக்க இந்திய படைப்பாக, தமிழ்ப் படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இதில் இருக்கிறது. ஹோப், டிரீம்ஸ் கம்ஸ் ட்ரூ (Hope, Dream Comes True)” என்றார்.
வேள்பாரி Audio Formatல் கேட்க :
https://play.vikatan.com/Velpari-audio-book
வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்