AP25184539125322

ஷுப்மன் கில் விராட் கோலியின் நகல் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முன்னதாக, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களும் எடுத்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேப்டன் ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் எடுத்து பல்வேறு சாதனைகளை படைத்தார்.

விராட் கோலியின் நகல்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகள் படைத்த நிலையில், ஷுப்மன் கில் விராட் கோலியின் நகல் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் அவரை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம், தான் எப்படிப்பட்ட முழுமையான பேட்டர் என்பதை ஷுப்மன் கில் காட்டியுள்ளார். அவரது ஆட்டம் இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கும் விராட் கோலியை எனக்கு நினைவுபடுத்தியது. ஷுப்மன் கில் கிட்டத்தட்ட விராட் கோலியின் கார்பன் நகல். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதற்கு மேல் சிறப்பான தொடக்கம் ஷுப்மன் கில்லுக்கு இருக்க முடியாது என நினைக்கிறேன்.

லீட்ஸில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என அவர் நினைத்திருப்பார். ஆனால், பர்மிங்ஹாம் டெஸ்ட்டில் வெற்றி பெறுவதற்கு சிறப்பான சூழலை அவர் உருவாக்கியுள்ளார். அவரது சிறப்பான இன்னிங்ஸை நேரில் பார்க்க முடிந்ததை சிறப்பான ஒன்றாக கருதுகிறேன். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் அவரது விக்கெட்டினை கைப்பற்ற ஷுப்மன் கில் ஒரு வாய்ப்புகூட கொடுக்கவில்லை. அவர் தரமான கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவரது ஆட்டம் மிகவும் சிறப்பானது என்றார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனதன் டிராட், தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது பயிற்சியின்கீழ், ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Former England player jonathan trott says Shubman Gill is a copy of Virat Kohli.

இதையும் படிக்க: அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன்: வைபவ் சூர்யவன்ஷி

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest