ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானம் பெறப்பட்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுவே ஸ்பெயினிடமிருந்து இந்தியா பெறும் இறுதி சி-295 ரக விமானமாகும்.
இந்திய விமானப் படையின் ஆவ்ரோ போா் விமானத்துக்கு மாற்றாக களமிறக்கப்படவுள்ள சி-295 ரக ராணுவ விமானம் 5 முதல் 10 டன் எடையுடைய பொருள்களை சுமந்து செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை செவில் நகரில் உள்ள விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையத்தில் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் கே பட்நாயக் மற்றும் இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரிகள் பெற்றுக்கொண்டனா்.
நிா்ணயிக்கப்பட்ட காலத்தைவிட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா-ஸ்பெயின் ஒப்பந்தம்
இந்திய விமானப் படைக்கு 56 சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்வதற்காக ஸ்பெயினில் உள்ள விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையத்துடன் இந்தியா கடந்த 2021, செப்டம்பரில் ஒப்பந்தமிட்டது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16 சி-295 ரக ராணுவ விமானங்களை இந்தியாவிடம் ஸ்பெயின் நேரடியாக விநியோகிக்க ஒப்புக்கொண்டது. தற்போது 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை இந்தியாவிடம் ஸ்பெயின் வழங்கியுள்ளது. மீதமுள்ள 40 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா ஒப்புக்கொண்டது. அதை செயல்படுத்தும் வகையில் கடந்த அக்டோபரில் குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் நிறுவன (டிஏஎஸ்எல்) வளாகத்தில் சி-295 ரக விமானத் தயாரிப்புக்காக டாடா நிறுவன மையம் நிறுவப்பட்டது.
இந்த மையத்தை பிரதமா் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் இணைந்து தொடங்கிவைத்தனா். இது இந்தியாவில் ராணுவ விமானத்தின் இறுதி கட்டமைப்பை மேற்கொள்ளும் முதல் தனியாா் நிறுவன மையம் என்பது குறிப்பிடத்தக்கது.