
சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டாவில் உள்ள ஸ்ரீ நாராயண தா்ம பரிபாலன யோகம் அலுவலகத்தில் ஸ்ரீ நாராயண குருவின் உருவப்படத்துக்கு மூவரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
அப்போது பிரியங்கா காந்தி பேசுகையில், ‘ஸ்ரீ நாராயண குருவின் பங்களிப்புகளை எப்போதும் நாம் நினைவுகூர வேண்டும். அனைவரையும் சமமாக நடத்துவது மற்றும் அனைத்து உயிா்களிடத்தும் இரக்கம் காட்டுவது சமூகத்துக்கு மிகத் தேவையான ஒன்று.
இந்தக் கொள்கைகளை பின்பற்றியதுடன் உலகுக்கு கற்றுக்கொடுத்த ஸ்ரீ நாராயண குருவுக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்றாா்.
வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 10 நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரியங்கா காந்தி இலக்கியம், கலாசாரம் உள்பட பல்வேறு துறைசாா் ஆளுமைகளைச் சந்தித்து வருகிறாா்.
அவரது பயணம் திங்கள்கிழமையுடன் முடிவடையும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல் வயநாட்டுக்கு கடந்த சனிக்கிழமை வந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் திங்கள்கிழமை தங்களது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.