
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா இன்று(ஜூலை 20) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி காலை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.
இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்டத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 8 மணிக்கு கருட கொடியேற்றம் நடைபெற்றது.
முதல் நாளான இன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வருகின்றனர். ஜூலை 24-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், 26-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.
28-ம் தேதி காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது.
அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: உ.பி.யில் சிஆர்பிஎஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது