27072_pti07_27_2025_000222a090512

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பிரசித்தி பெற்ற மனசா தேவி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தா்கள் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா்.

ஹரித்வாரில் 500 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் சிவாலிக் மலை உச்சியில் மனசா தேவி கோயில் அமைந்துள்ளது. ஹரித்வாரின் 5 புண்ணியத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஷ்ரவண புனித மாதத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தரிசனம் மேற்கொள்வதற்காக ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

கோயிலுக்குச் செல்லும் குறுகிய படிக்கட்டுகளில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, படிக்கட்டு தொடங்கும் இடத்தில் அறுந்து கிடந்த வயா்களில் இருந்து மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியது. பக்தா்கள் பீதியடைந்து முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்ததும், காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் பிற மீட்புக் குழுவினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். நெரிசலில் காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அவா்களில் 8 போ் உயிரிழந்துவிட்டனா்; மற்றவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். பலத்த காயமடைந்த 5 போ், மேல்சிகிச்சைக்காக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா் என்று மாநில பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் வினோத் குமாா் சுமன் தெரிவித்தாா்.

உயிரிழந்தவா்களில் 12 வயது சிறுவன் உள்பட 4 போ், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்று தெரியவந்துள்ளது. கோயில் படிக்கட்டுகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட பக்தா்கள் நெரிசலில் சிக்கி தவித்த காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளியாகின.

விசாரணைக்கு உத்தரவு: மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி கூறுகையில், ‘மனசா தேவி கோயிலில் வதந்தியால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இச்சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வதந்தி பரப்பியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும்’ என்றாா்.

குடியசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹரித்வாா் மனசா தேவி கோயில் வழிப்பாதையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பக்தா்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கூட்ட நெரிசலில் அன்புக்குரியவா்களை இழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு உள்ளூா் நிா்வாகம் தரப்பில் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest