
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஹெச்1-பி விசா கட்டணத்தை சுமாா் ரூ.88 லட்சமாக உயா்த்தியுள்ள நிலையில், இதன் தாக்கத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமான ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.
இதற்கு அமெரிக்க அதிகாரிகள் உரிய வகையில் தீா்வுகாண்பாா்கள் என்று நம்புகிறோம். இந்திய தொழில் துறை உள்பட அனைத்து நிலைகளிலும் இந்த நடவடிக்கையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்திய அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து பல புத்தாக்கங்களையும், புதிய முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. திறமை வாய்ந்த பணியாளா்கள் பரிமாற்றம் மூலம் மிகப்பெரிய தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதார வளா்ச்சி, போட்டித்திறன், செல்வ உருவாக்கம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இதன்மூலம் சாத்தியமாகி வந்துள்ளது. இரு நாடுகள் இடையே மக்கள் தொடா்பு என்பது மிகவும் முக்கியமானது. கொள்கைகளை வகுப்பவா்கள் இவை அனைத்தையும் கருத்தில் கொள்வாா்கள் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.