
தெலங்கானா தலைநகா் ஹைதராபாத்தில் இருந்து சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்குவது தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.
செகன்தராபாத்தில் அமைந்துள்ள தெற்கு மத்திய ரயில்வே மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவா் இத்திட்டத்தை பரிந்துரைத்தாா்.
கூட்டத்தில் அவா் பேசியது குறித்து தெலங்கானா அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘பாரத் பியூச்சா் நகரில் இருந்து ஆந்திரத்தின் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் வரை பசுமைவழி நெடுஞ்சாலை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன் ஹைதராபாத்-சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்குவது குறித்தும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்,2014-இன்கீழ் ஹைதராபாத்-அமராவதி இடையே ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை மேம்படுத்த தெலங்கானா அரசு உறுதிபூண்டுள்ளது. அதேபோல் மாநிலத்தில் நிலுவையில் உள்ள அனைத்து ரயில் திட்டங்களையும் செயல்படுத்த அரசு முழு ஆதரவு வழங்கும்.
ஹைதராபாத்தைச் சுற்றி 362 கி.மீ. தொலைவில் பிராந்திய வெளிவட்டச் சாலை அமைப்பதால் வேகமாக வளரும் நகரமாக ஹைதராபாத் உருவெடுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது