
தொடர்
வேளாண் காடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற, தடசு மரத்தின் தனிச்சிறப்புகள், சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மரங்களின் கழிவுகளிலிருந்து, ‘பயோ சார்’ என்றழைக்கப்படும் ‘உயிர்க்கரி தயார் செய்யும் முறை குறித்தும், இதற்கான சந்தை வாய்ப்புகள் குறித்தும் தற்போது பார்ப்போம்.
‘அதிகமாக செலவு செய்பவர்களை பார்த்து, ‘காசை கரியாக்குறான்’ என சொல்லப் படுவதுண்டு. இன்றைக்குக் கரி, காசாகிக் கொண்டிருக்கிறது. அதில் வேளாண் காடுகள் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண் காடுகள் வளர்ப்பில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பார்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, தமிழகத்தில் இதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்துப் பேசி வருகிறோம்.
குறுகிய காலம், நடுத்தர காலம், நெடுங்காலம் மற்றும் வருடம் முழுவதும் வருமானம் தரும் புதிய ரக மரங்கள், தொழில் நுட்பங்கள், தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்துப் பதிவு செய்து வருகிறோம். ஆசியாவிலேயே மேட்டுப் பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மட்டும்தான் வேளாண் காடுகள் தொழில்முனைவோர் மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோரை உருவாக்கியிருக்கிறோம்.
தொழில் தொடங்குவதற்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் குறித்து வழிகாட்டுவது, வங்கிகள் மூலம் நிதி பெற்றுத் தருவது, தொழில்நுட்ப பயிற்சி கொடுப்பது, சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது ஆகிய பணிகளில் வேளாண் காடுகள் தொழில்முனைவோர் மையம் ஈடுபட்டு வருகிறது.

வேளாண் காடு கழிவுகள் மூலம் உயிர்க்கரி
உலகம் முழுவதும் பரவலாக, பயோசார் பற்றி பேச்சுகள் நிலவுகின்றன. வேளாண் காடுகள் கழிவிலிருந்து உயிர் எரிசக்தி (Bio Mass) தயாரித்து அதன் மூலம் உயிர்க்கரி (Bio Char), செறிவூட்டப்பட்ட கார்பன் (Activated Carbon), உயிர் நிலக்கரி அல்லது உயிர் எரிகட்டி (Bio Coal) ஆகியவற்றை உருவாக்கலாம். உயிர்க்கரி உற்பத்தி செய்து நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்தலாம். மதிப்புக் கூட்டினால், அதுதான் உயிர் நிலக்கரி. இதை, நிலக்கரிக்கு மாற்று எரிசக்தியாகவும் பயன் படுத்தலாம். செறிவூட்டப்பட்ட கார்பன் நீர் மற்றும் வாயுக்களில் உள்ள குறிப்பிட்ட சில வேதிப்பொருள்களை நீக்கப் பயன்படுகிறது. உயிர்க்கரி, உயிர் நிலக்கரி இரண்டுக்குமே இன்று உலக அளவில் அதிக தேவை உள்ளது. இவற்றின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக, பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இனிவரும் காலங்களில், உயிர்க்கரி மற்றும் உயிர் நிலக்கரி ஆகியவை உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறைந்த செலவில் மண்ணின் வளத்தைக் கூட்டுவதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்வதற்கும், இந்த இரண்டு பொருள்களும் முக்கிய பங்களிப்பு செய்யும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கு இவை கைகொடுக்கும். இந்த மதிப்புக்கூட்டுத் தொழில்நுட்பம் மூலம் ஏராளமான தொழில்முனைவோர்களும் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பெரும்பாலான பகுதிகளில் நிலத்தில் உள்ள அங்கக கரிமசத்து 0.5 சதவிகிதத்துக்குக் கீழ் சென்றுவிட்டது. கார்பன் தன்மை இல்லாததால் மண் வளம் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைகிறது. இதனால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, உயிர்க்கரியை நேரடியாக நிலத்தில் போடும்போது, உடனடியாக கார்பன் தன்மை கூடுகிறது. இதனால் நுண்ணுயிர்கள் பலமடைந்து, மண் வளம் பெருகி உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கிறது. முக்கியமாக மண் துளைகள் விரிவாகி நீர்வளமும் பாதுகாக்கப் படுகிறது.

மண் வளம்… சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
இந்த உயிர்க்கரியை, உயிர் நிலக்கரியாக மாற்றி விற்பனை செய்வதற்கும் நல்ல சந்தை உள்ளது. சின்னச் சின்ன துகள்களை அடர்த்தியாக்கி, எரிகட்டியாகத் தயாரிப்பது குறித்து ஏற்கெனவே பார்த்துள்ளோம். அதேபோல தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் இதையும் உருண்டை, நீளம், சதுரம், செவ்வக வடிவில் தயாரித்து விற்பனை செய்யலாம். மத்திய அரசு, இந்தியாவில் நிலக்கரி பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் 5 சதவிகிதம் உயிர் எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அவற்றில், இந்த உயிர் நிலக்கரியின் பயன்பாடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உயிர் நிலக்கரியை நிலக்கரியுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
பிரபல நிறுவனங்கள் 100 சதவிகிதம் நிலக்கரிக்குப் பதிலாக உயிர் நிலக்கரியை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாக கூறப்படுகின்றன. இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும். 2070-ம் ஆண்டுக்குள் நாட்டின் கரியமில வாயு உமிழ்வை பூஜ்ஜியமாகக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
எனவே, இந்த உயிர் நிலக்கரி நமக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். தமிழ்நாட்டில் நிறைய நிலப்பரப்புகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த உயிர் நிலக்கரி தயாரிக்கும் பட்சத்தில் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும். சந்தை வாய்ப்பு விரிவடையும். வேளாண் கழிவுகள் அனைத்தையும் மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றவும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சவுக்கு, தைலம், மலைவேம்பு, சிசம், வேலம், மூங்கில் உள்ளிட்ட வேளாண் காடுகளில் வளர்க்கும் அனைத்து விதமான மரங்களின் கழிவுகளையும் உயிர்க்கரி தயாரிப்புக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்தலாம். இந்த அனைத்து மரங்களும் வேகமாக வளரும். பல்பயன் தரக்கூடியவை. பிளைவுட், தடிமரம் உள்ளிட்ட பயன் பாட்டுக்குப் போக மீதமிருக்கும் கழிவுகளை உயிர்க்கரிக்குப் பயன்படுத்தினால் போதும். இந்த மரங்களில் எரியும் தன்மையும் சிறப்பாக உள்ளது. அதேநேரத்தில் சாம்பல் சத்தும் குறைவாக உள்ளது.

கிலோ 10 – 100 ரூபாய்…
தென்னை மட்டை, மக்காச்சோளத் தட்டை, பருத்தி மார் உள்ளிட்ட கழிவு களிலிருந்தும் உயிர்க்கரி தயாரிக்கலாம். அதாவது, அந்தக் கழிவுகளைப் பொடியாக்கி, பிறகு துகள்களை ஒட்டி அடர்த்தியாக மாற்றி உயிர்க்கரியாக மாற்றி விற்பனை செய்யலாம். வேளாண் கழிவுகளைவிட மரக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உயிர்க்கரிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
எரியும் திறன், உற்பத்தி ஆகியவற்றில் வேளாண் கழிவுகளை விட மரக்கழிவு சிறப்பாக இருக்கிறது. அதற்காகத்தான் வேளாண் காடுகளில் மரம் சார்ந்த உயிர்க்கரி தயாரிப்பதை ஊக்கப்படுத்துகிறோம். இதற்கான நவீன தொழில்நுட்பம் வந்து விட்டது.
ஆக்ஸிஜன் இல்லாத அல்லது மிக குறைந்தளவு ஆக்ஸிஜன் உள்ள சூழலில்தான் இந்தத் தொழில்நுட்பதை இயக்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தை ‘பைரோலிசிஸ்’ (Pyrolysis) என்றழைப்பார்கள். இதில் உயிர்க்கரியை 100 – 300 டிகிரி வெப்பத்தில் எரிய வைக்க வேண்டும். அப்போது அவை உயிர் நிலக்கரியாக மாறிவிடுகிறது. இப்படி செய்யும்போது கடைசியில் கார்பன் மட்டுமே இருக்கும். இப்போது உயிர் நிலக்கரி தயாரிக்கும் ஏராளமான தொழிற்சாலைகள் வந்துவிட்டன. இதன் காரணமாகத்தான் கரி காசாகிறது என்று கூறுகிறோம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள், எரிபொருள் தேவைக்கு, குருடாயில் நிலக்கரி மற்றும் எல்.பி.ஜி வாயுவை பயன் படுத்துகின்றன. இவை அனைத்துமே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். இதற்கு மாற்றாக, அதைவிட குறைந்த விலையில் மர எரிவாயு (Gasification) தொழில்நுட்பத்தில் உயிர்க்கரி தயாரித்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. தரத்தைப் பொறுத்து சராசரியாக 1 கிலோ உயிர்க்கரி 10-100 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

உயிர் தங்கம்
உயிர்க்கரியை, சோதனை முயற்சியாக, சவுக்கு மரங்களுக்கு உரமாக பயன்படுத்திப் பார்த்தோம். இதன்மூலம் மண் வளம் அற்புதமாக மாறி, சவுக்கு மரங்கள் பச்சை பசேலென்று அருமையாக உள்ளன. நம் ஊர்களில் உள்ள ஸ்டீல், அலுமினியம், டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், மர எரிவாயு ஆலையை அமைப்பதன் மூலம், தேவையான எரிசக்தியை நிறுவனங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
இதில் இவ்வளவு வாய்ப்புகள் உள்ளதா என்ற புரிதல் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
வேளாண் காடுகள் சார்ந்த வேளாண் கழிவுகள், வேளாண் காடுகள் சார்ந்த மரக்கழிவுகள், வேளாண் காடுகள் சார்ந்த தொழிற்சாலை கழிவுகள் ஆகியவற்றி லிருந்து உயிர்க்கரி தயாரிக்கலாம். உயிர் எரிசக்திக்காக பிரத்யேகமாக எரிசக்தி தோட்டங்களை உருவாக்கி, அதை உயிர்க்கரி மற்றும் உயிர் நிலக்கரிக்காக மட்டுமே பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் உள்ள 135 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இங்கே, மண்வளம் பாதிக்கப்பட்டப் பகுதிகளில், உயிர்க்கரி மூலம் மண் வளத்தைப் பெருக்கிக் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்கள், தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் இணைந்து பணியாற்றினால், இவை கழிவுகளாகப் பார்க்கப்படாது. இவை எல்லாமே உயிர் தங்கமாகத்தான் கருதப்படும். உயிர்க்கரியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உணவகங்களில் பார்பிக்யூ சிக்கன் தயாரிப்பதற்கு, அடியில் கரிதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை கரிக்கு எரியும் தன்மை நன்றாக இருக்க வேண்டும். ஆனால், புகை வரக் கூடாது. அதேசமயம் 100 சதவிகிதம் எரியக் கூடியதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதுமே இதற்குத் தேவை அதிகம் உள்ளது.

வருமானம்
அடுத்த 5-10 ஆண்டுகளில் ஏராளமான புதிய தொழில்முனை வோர்கள் உருவாவதற்கான வாய்ப்பும் நன்றாக உள்ளது. உயிர்க்கரியில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் நமக்குத் தேவையான ரகத்தை தேர்வு செய்து பயன்படுத்தலாம். சராசரியாக ரூ.5 லட்சம் முதலீடு இருந்தாலே இந்தத் தொழிலை தொடங்கிவிட முடியும். இதற்கான இயந்திரங்கள் மானிய விலையில் கிடைக்கின்றன.
மரமாக விற்றால் ஒரு டன்னுக்குச் சராசரியாக 5,000- 8,000 ரூபாய்தான் கிடைக்கும். இதுவே உயிர்க்கரியாக விற்பனை செய்தால் ஒரு டன் சராசரியாக 12,000 – 18,000 ரூபாய் கிடைக்கும். அதையும் மதிப்புக்கூட்டி உயிர் நிலக்கரியாக விற்றால், ஒரு டன் சராசரியாக 15,000 – 25,000 ரூபாய் கிடைக்கும். மண்வளம், தொழில் முனைவோர் என இதில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. முக்கியமாக, நமக்கு தேவையான பசுமை எரிசக்தியை உருவாக்க முடியும்.
– கிளைகள் படரும்
ரூ.50 லட்சம் முதலீடு 2 கோடி வருமானம்!
உயிர் நிலக்கரியை ஏற்றுமதி செய்துவரும் கோவையைச் சேர்ந்த ‘கிரீன் விரோ குளோபல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முருகானந்தத்திடம் பேசியபோது, “நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். பொதுவாக, விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு, வேளாண் கழிவுகளை எரித்து விடுவார்கள். அதை நாங்கள் உயிர் நிலக்கரியாகத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம். கொரோனா காலத்தில்தான் இந்த யோசனை தோன்றியது. வெளிநாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் பார்பிக்யூ இயந்திரம் பயன்படுத்துகிறார்கள். மரக்கரி தயாரித்து பார்பிக்யூக்குப் பயன்படுத்தி வந்தார்கள். அதற்கு மாற்றாக நாங்கள் வேளாண் காடுகள் கழிவுகளிலிருந்து உயிர் நிலக்கரி தயாரிக்கிறோம். பொதுவாக, உயிர்க்கரியை உயிர் நிலக்கரியாக மாற்றும்போது, அதன் எடை குறைந்துவிடும். அப்படியே எரித்தால் விரைவாகத் தீர்ந்துவிடும். நாங்கள் அதைத் துகள்களாகப் பிரித்து, அடர்த்தியாக மாற்ற மேலும், சில மூலப்பொருள்களைக் கலந்து கட்டியாக மாற்றுகிறோம். அதை உயிர் நிலக்கரி அல்லது உயிர் எரிகட்டி என்று கூறலாம்.

உலகில் ஒவ்வொரு நொடியும் 4 கால்பந்து மைதானம் அளவுக்கான காடுகள் அழிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும், எரிபொருளுக்காகத்தான் காடுகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக இதைக் கொண்டு செல்ல முடியும். இது விவசாயிகளின் பொருளாதாரத்துக்கு உதவி செய்து தொழில்முனைவோர் வாய்ப்பையும் கொடுக்கிறது. இதற்கு மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. அரசு மானியம், வங்கிக் கடனும் கிடைக்கிறது. இப்போது நாங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். மாதத்துக்கு 100 டன் உற்பத்தி செய்கிறோம். சராசரியாக ரூ.50 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.
முருகானந்தம், செல்போன்: 98422 90222

வருமானம் கொடுக்கும் மர எரிவாயு!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த ‘பயோ தெர்ம்’ நிறுவனத்தின் சி.இ.ஓ ரங்கநாதனிடம் பேசியபோது, “நான் கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். கார்பன் டை ஆக்ஸைடு அதிக அளவு உமிழ்வதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாக, வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதைச் சரி செய்ய டீசல், நிலக்கரி, எல்.பி.ஜி போன்றவற்றின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு இது போன்ற மர எரிவாயு ஆலைகள் அவசியம். நாங்கள் உயிர் எரிபொருள் மூலம் மரங்களை வளர்த்து, அதன் மூலம் வாயு தயாரிக்கிறோம். அந்த வாயுவை டீசல், நிலக்கரி, எல்.பி.ஜிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். உயிர் நிலக்கரியை மண்ணில் போட்டால் 1,000 ஆண்டுகள் ஆனாலும் அப்படியேதான் இருக்கும். உருக்காலைகள், கொதிநிலை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பொம்மை உற்பத்தி உள்ளிட்ட பல நிறுவனங்கள், இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. மண்ணில் கார்பன் கிடைப்பதற்கு உயிர்க்கரிதான் சிறந்த எரிபொருள்.
மண்ணில் உயிர்க்கரி பயன்படுத்தும்போது நீர் பாதுகாப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது. இதன் மூலம் 4,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தும் இடத்தில் 3,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தினால் போதும். உரத்துக்கான செலவும் குறையும். டீசல் சராசரியாக ஒரு லிட்டர் 90 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதற்கு மாற்றாகப் பயன்படுத்தும் மர எரிவாயு ஒரு கிலோ 30-32 ரூபாய்தான். இதன் மூலம் 60 ரூபாய் வரை சேமிக்கலாம். எங்கள் மர எரிவாயுவை பிற மாநிலங்களுக்கு அனுப்புகிறோம். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். மேலும் உயிர்க்கரி, மரங்கள் வளர்ப்பதற்கு எப்படி பயன்படுகிறது என்று சோதனை செய்கிறோம். அதில் சிறப்பான முடிவுகள் கிடைத்துள்ளன. சராசரியாக வளரும் மரங்களைவிட உயிர்க்கரி மூலம் வளர்க்கும் மரம் 40 சதவிகிதம் வேகமாக வளரும். உற்பத்தியும் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது” என்றார்.
தொடர்புக்கு, ரங்கநாதன்,
செல்போன்: 96322 80930