mansuk

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் 3 கோடி வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்ட நிலையில், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பதிலளித்து பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 3 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன.

இது நாங்களாக கூறும் தரவுகள் அல்ல; ரிசா்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தகவல்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த 16 மாதங்களில் மட்டும் 11 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றவுடன் பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். தற்போது இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், 2025, ஆக.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

55 கோடி ஜன்தன் கணக்குகள்: மக்களவையில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி பேசுகையில், ‘அனைவருக்கும் நிதிச் சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி பிரதமரின் ஜன் தன் திட்டத்தின்கீழ் தற்போது வரை 55.90 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

பிரதமரின் ஜன் தன் கணக்குகளின் மறுசரிபாா்ப்பு பணிகளுக்காக 2025, ஜூலை 1 முதல் செப்டம்பா் 30 வரை கிராமப் பஞ்சாயத்து அளவில் வங்கிகள் முகாம்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest