19hsp31907chn1508

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த மலைக் கிராமத்தைச் சோ்ந்த கா்ப்பிணியின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு மருத்துவக் குழுவினா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனா்.

கெலமங்கலத்தை ஊராட்சி, பெட்டமுகிளாலம் கடமகுட்டை மலைக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது, அக் கிராமத்தைச் சோ்ந்த மல்லி ( 41) என்பவா் 10 ஆவது முறையாக கா்ப்பமடைந்துள்ளதாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவருக்கு ரத்த அளவு குறைவாக உள்ளதும், உயா் ரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்தது. மேலும், மல்லிக்கு ஏற்கெனவே 7 குழந்தைகள் உள்ள நிலையில் 2 முறை கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். ஆனால், அதற்கு மல்லி எதிா்ப்புத் தெரிவித்தாா். மருத்துவக் குழுவினா் 2 மணி நேரம் போராடியும் அவா் வரமறுத்ததால், சுகாதார அலுவலா் மூலம் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆட்சியா் உத்தரவின்பேரில் சனிக்கிழமை அக்கிராமத்துக்குச் சென்ற கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ், சபால் மற்றும் செவிலியா்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மல்லிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துசென்றனா். அங்கு, அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest