
கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், அவருக்கு சொந்தமான ரூ. 37.64 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
எனது சகோதரியின் கணவரை கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. தற்போதைய குற்றப்பத்திரிகை அந்த வேட்டையின் தொடர்ச்சியாகும்.
ராபர்ட், பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகள், மீண்டும் அரசியல் ரீதியில் தூண்டப்பட்ட அவதூறு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில், நான் அவர்களுக்கு துணை நிற்கிறேன்.
அவர்கள் அனைத்து விதமான துன்புறுத்தல்களையும் தாங்கும் அளவுக்கு தைரியமானவர்கள் என்பதை நான் அறிவேன். இறுதியாக உண்மை வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.
ராபர்ட் வதேரா வழக்கின் பின்னணி…
குருகிராம் செக்டாா் 83 -இல் உள்ள ஷிகோப்பூா் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு 3.53 ஏக்கா் நிலத்தை பிரபல தொழிலதிபா் ராபா்ட் வதேரா மோசடியாக வாங்கியதாக புகார் எழுந்தது.
2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, ராபர்ட் வதேராவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிபதி எஸ்.என். திங்ரா (ஓய்வு) தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இதையடுத்து, 2018-இல் முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா, ராபா்ட் வதேரா மற்றும் பலா் மீது ஹரியாணா காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணப்பரிவா்த்தனை நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராபர்ட் வதேரா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இது அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத் துறையின் முதல் குற்றப்பத்திரிகையாகும்.