rb_chouthri_vijay

இன்றைக்கு தமிழ் சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை தயாரிப்பதே பெரிய சாதனையாக இருக்கிறது என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள். அந்தப் படத்தை எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் செய்வது அதைவிட அசுர சாதனை. திரைப்பட உலகின் பாரம்பரிய ஏவி.எம்., விஜய் வாகீனி நிறுவனங்களே சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டது.

இந்த சூழ்நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் சினிமா உலகில் நிலைத்து நீடித்து நிற்கிறது, சூப்பர் குட் பிலிம்ஸ். அதோடு நிற்காமல் விரைவில் 100 வது படத்தை தயாரித்து அசத்தப் போகிறது சூப்பர் குட் பிலிம்ஸ். திரைப்பட உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த நிறுவனத்தை 1990 ஆம் ஆண்டு துவங்கினார், பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரி. முதன் முதலில் வெளியான திரைப்படம் புது வசந்தம் . விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது.

சூப்பர் குட் பிலிம்ஸ்

கே.எஸ். ரவிக்குமார், லிங்குசாமி, சசி, ராஜகுமாரன், போன்ற புதியவர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்தவர் செளத்ரி. நாட்டாமை, ஆனந்தம், சொல்லாமலே, நீ வருவாய் என, ஏராளமான வெள்ளி விழா படங்களை தமிழ் சினிமாவுக்கு அள்ளி கொடுத்தது, சூப்பர் குட் பிலிம்ஸ்.

சமீபத்தில் வடிவேலு, பகத்பாசில் நடிப்பில் வெளிவந்த மாரீசன், சூப்பர் குட் பிலிம்ஸின் 98-வது திரைப்படம். அடுத்து விஷால் 99 வது படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். விரைவில் 100 வது திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு வருகிறார்கள்.

விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முதன் முதலாக திருப்புமுனை கொடுத்த படம் `பூவே உனக்காக’ . அந்தப் படத்தை விக்ரமன் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது. அடுத்து வெளிவந்த `துள்ளாத மனமும் துள்ளும்’ படமும் பெரு வெற்றி பெற்றது. கடந்த இரண்டு வருடமாக தனது தயாரிப்பில் உருவாகும் 100 வது படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என விரும்பினார், செளத்ரி.

அவரது மகன் ஜீவா, விஜய்க்கு ரொம்பவும் நெருக்கம். அப்படி இருந்தும் ஜீவாவின் கோரிக்கை உடனடியாக கைகொடுக்கவில்லை. முதலில் செளத்ரி குரலுக்கு செவிமடுத்த விஜய், அரசியல் உலகில் தீவிரமாக அடியெடுத்து வைத்த பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ்ன் 100 வது படத்தில் நடிப்பதற்கு நோ சொல்லிவிட்டார்.

விஜய்
விஜய்

சூர்யவம்சம் – 2

ஒரு காலத்தில் சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளிவந்த சூர்யவம்சம் திரைப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. இப்போது தனது 100 வது படத்துக்கு சூர்யவம்சம் 2 என்று பெயர் சூட்டி இருக்கிறது சூப்பர் குட் பிலிம்ஸ். இந்தப் படத்தில் சரத்குமார், ஜீவா என்று இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திட்டம் இருக்கிறது.

முதல் பாகத்தில் தேவயானி நடித்து இருந்தார். இப்போது ராதிகா, குஷ்புவிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. முன்பு எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் வெளிவந்த பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரபரப்பை கிளப்பியது. இப்போது இசையமைக்க யுவன் சங்கர் ராஜா, ஜி. வி . பிரகாஷ் இருவரிடமும் பேசிக் கொண்டு இருக்கிறது நிர்வாகம். சூர்யவம்சம் 2 திரைப்படம் முழுக்க முழுக்க புதுக்கதை என்பதால் விக்ரமனுக்கு பதில் புதிதாக இளம் இயக்குநர் ஒருவர் இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest