
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த குழு 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 8)பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
கொள்கையின் முக்கிய அம்சங்களில், 3, 5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது எனவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழை முதல் மொழியாகவும், கற்பிக்கும் மொழியாகவும் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருமொழிக் கொள்கைதான்
மாநில பள்ளிக் கல்விக் கொள்கை வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பை முடித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் விழுக்காடு 75%-ஆக உள்ளது. 100% மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே இலக்கு. சமத்துவ கல்வியை உருவாக்குவோம், அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம், பாகுபாட்டை நீக்குவோம்” என்று பேசியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ” தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என இன்னொரு வாழும் பெரியாராக போர் முரசு கொட்டியவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதம் பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்வி கொள்கை. ரூ.10,000 கோடி தந்தாலும் NEP-ஐ ஏற்க மாட்டோம் என கூறியவர் முதலமைச்சர்” என்று பேசியிருக்கிறார்.
பின்னர் பேசிய அன்பில் மகேஸ், “தற்போது நடைமுறையில் இருக்கும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை நடப்பாண்டிலேயே ரத்து செய்யப்படும். 10, 12 -ம் வகுப்புகளுக்கு மட்டும் தான் பொதுத்தேர்வு நடக்கும்” என்று தெரிவித்தார்.