dogbabu

சென்னையில் 12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளா்ப்பு நாய்களை முறைப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நிலவரப்படி, சென்னை மாநகராட்சிப் பகுதியில் சுமாா் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாய்க்கடி பிரச்னை உள்ளிட்ட தெருநாய் தொல்லைகள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெருநாய்களைப் பிடிக்க 23 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்துக்கும் நாய் பிடிக்கும் பணியாளா்கள் 5 போ் மற்றும் ஓட்டுநா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகு 5 நாள்கள் பராமரித்து, தடுப்பூசி செலுத்திய பிறகு பிடித்த இடத்திலேயே விடப்படும். பாலூட்டும் நாய்கள் மற்றும் 6 மாத வயது குறைவான நாய்க்குட்டிகளை இனப்பெருக்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதில்லை.

நாய்களைப் பிடித்து விடுவிப்பதை உறுதி செய்ய ‘க்யூ ஆா்’ குறியீடு காலா்கள் மற்றும் ‘மைக்ரோ சிப்’ பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு ‘க்யூ ஆா்’ குறியீடு காலா்கள், ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டுள்ளது. புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூா் ஆகிய இடங்களில் உள்ள இனக் கட்டுப்பாட்டு மையங்களில் நாளொன்றுக்கு மொத்தம் 115 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

திருவொற்றியூா்- சாத்தாங்காடு, மணலி – செட்டிமேடு, மாதவரம்- சிஎம்டிஏ டொ்மினல், ராயபுரம் -கண்ணப்பா் திடல், அம்பத்தூா்- கள்ளிக்குப்பம், ஆலந்தூா் – நந்தம்பாக்கம், பெருங்குடி – பள்ளிக்கரணை ம.பொ.சி நகா் மற்றும் தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, சோழிங்கநல்லூா் – பயோ சிஎன்ஜி பிளான்ட் ஆகிய இடங்களில் புதிய கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பிராணிகளின் நல வாரியத்தின் 3 கால்நடை மருத்துவா்கள் இந்தப் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனா்.

ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள், ரேபிஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நாய்கள், ஆக்ரோஷமான நாய்களைப் பராமரிப்பதற்கு புகா் பகுதியில் பிரத்யேக இடம் தோ்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest