
அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் ஏரியில், 140 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கி மாயமான பேய்க் கப்பலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில், கடந்த 1867 ஆம் ஆண்டு 3 அடுக்குகளைக் கொண்ட, தானியங்கள், இரும்புத் தாதுகளைக் கொண்டு செல்வதற்காக, எஃப்.ஜே. கிங் எனும் சரக்கு கப்பல் கட்டப்பட்டது.
அந்தக் காலத்தில், மிகவும் பிரபலமான சரக்குக் கப்பல்களில் ஒன்றாக அறியப்பட்ட எஃப்.ஜே. கிங், 1886 ஆம் ஆண்டு செப்.15 ஆம் தேதி வட அமெரிக்காவின் கடல் போன்ற 5 பெரும் ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியில் பயணத்தின்போது புயலில் சிக்கி சேதமானது.
எஸ்கானாபாவில் இருந்து சிகாகோவுக்கு இரும்புத் தாதுவைக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது 8 முதல் 10 அடி உயர அலைகளால் சேதமான இந்தக் கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் கேப்டன் வில்லியம் கிரிஃபின் ஆகியோரின் கண் முன்னே மிச்சிகன் ஏரியில் மூழ்கியது.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கப்பலை, 1970களில் தொடங்கி பல்வேறு ஆய்வாளர்கள் தேடி வந்தனர். அவ்வப்போது, அந்தப் பகுதியில் சென்றுவரும் வர்த்தக கப்பல்கள் தங்களது மீன்பிடி வலைகளில், இந்தக் கப்பலின் எச்சங்கள் சிக்கியுள்ளதாகக் கூறிய கதைகளும் ஏராளம்.
பல ஆண்டுகளாக, பல்வேறு குழுக்களின் தேடுதல் வேட்டைகளில் சிக்காததால் எஃப்.ஜே. கிங் பேய்க் கப்பல் (கோஸ்ட் ஷிப்) எனும் அடைமொழியைப் பெற்றது.
இந்த நிலையில், ஆய்வாளர் பிரெண்டன் பைலோட் தலைமையிலான குழுவினர், மிச்சிகன் ஏரியில் மூழ்கி மாயமான எஃப்.ஜே. கிங் கப்பலை, கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்துள்ளதாக, விஸ்கான்சின் வரலாற்று சமூகம் மற்றும் விஸ்கான்சின் நீருக்கடி அகழ்வாராய்ச்சி சங்கம் அறிவித்துள்ளன.
அப்பகுதியில் அமைந்துள்ள பெய்லி துறைமுகத்தின் கலங்கரை விளக்கத்தில் இருந்து 0.8 கி.மீ. தூரத்தில் 140 அடி நீளமுள்ள எஃப்.ஜே.கிங் கப்பலை சோனார் உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் கப்பல் மூழ்கியபோது, அதில் ஏற்றப்பட்டிருந்த இரும்புத் தாதுகளின் கனத்தினால், கப்பல் உடைந்திருக்கக் கூடும் எனக் கருதப்பட்ட நிலையில், பெரிய பாதிப்புகள் ஏதுமின்று கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!