நமது சிறப்பு நிருபர்
காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதிலில், “மத்திய மீன்வளத் துறையால் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் அங்கமாக காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் 100 கடலோர மீனவ கிராமங்களை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், தமிழகத்தில் 16 கடலோர மீன்பிடி கிராமங்கள் மேம்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கடற்பாசி வளர்ப்பு, செயற்கை கடலடிப்பவளப்பாறைகள் அமைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் மீன்வளத் துறையில் ஏற்படும் தாக்கங்களை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் கடலோர மீன்பிடி கிராமங்களை ஊக்குவித்தல் போன்ற முன்முயற்சிகளை பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா ஒருங்கிணைக்கிறது என அமைச்சர் கூறியுள்ளார்.