
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஹாசன் நவாஸ் அதிகபட்சமாக 23 பந்துகளில் அதிரடியாக 40 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சல்மான் அகா 38 ரன்களும், ஃபகர் ஸமான் 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப் மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
மே.இ.தீவுகள் வெற்றி
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் குடகேஷ் மோட்டி அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 21 ரன்களும், ராஸ்டன் சேஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 16 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சைம் ஆயுப் 2 விக்கெட்டுகளையும், ஷாகின் ஷா அஃப்ரிடி மற்றும் சூஃபியான் முக்யூம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஜேசன் ஹோல்டருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: இங்கிலாந்து தொடருக்காக ஒவ்வொரு நிமிடமும் கடினமாக உழைத்த கே.எல்.ராகுல்: அபிஷேக் நாயர்