
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
மூவர் சதம் விளாசல்; வலுவான முன்னிலை
முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. டெவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கோப் டஃபி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜேக்கோப் டஃபி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், டெவான் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், ஹென்றி நிக்கோல்ஸுடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே ரச்சின் ரவீந்திரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி நிக்கோல்ஸ் 245 பந்துகளில் 150 ரன்கள் (15 பவுண்டரிகள்) எடுத்தும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 139 பந்துகளில் 165 ரன்கள் (21 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் உள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகிறாரா விராட் கோலி?