BJP-congress-flags-edi

2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,532.09 கோடி என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 70 சதவீதத்துக்கும் மேலான நிதி தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,532.09 கோடியாகும். இதில் ரு.685.51 கோடி வருவாயுடன் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் (ரூ.646.36 கோடி), பிஜு ஜனதா தளம் (ரூ.297.81 கோடி), தெலுங்கு தேசம் கட்சி (ரூ.285.07 கோடி), ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் (ரூ.191.04 கோடி) ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்த 5 கட்சிகளின் வருவாய் ஒட்டுமொத்த பிராந்திய கட்சிகளின் வருவாயில் 83.17 சதவீதம் பங்கு வகிக்கிறது. தணிக்கை அறிக்கைகளை இந்திய தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்து 313 நாள்கள் ஆன நிலையிலும் 20 பிராந்திய கட்சிகளின் அறிக்கைகள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

2023-ஆம் நிதியாண்டில் இந்த பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.1,736.85-ஆக இருந்த நிலையில் 2024-ஆம் நிதியாண்டில் இது 45.77 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் ரூ.312.93 கோடி வருவாயைப் பதிவு செய்தது.

வருவாய்க்கு அதிகமாக செலவு: தங்கள் வருவாயை முழுமையாக செலவு செய்யவில்லை என 27 கட்சிகள் தெரிவித்துள்ளன.மாறாக திமுக, சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்துள்ளன.

கோவா ஃபாா்வா்ட் கட்சி எவ்வித வருவாயையும் பதிவு செய்யாத நிலையில் ரூ.1.56 லட்சம் செலவுக்கணக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த கட்சிகளின் மொத்த வருவாயான ரூ.2,532.09-இல் ரூ.2,117.85 கோடி (83.64 சதவீதம்) நன்கொடைகள் மூலமாக பெறப்பட்டுள்ளது. அதில் ரூ.1,796.02 கோடி (70.93 சதவீதம்) தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டதாக திமுக, திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 10 கட்சிகள் தெரிவித்துள்ளன.

ரூ.4,500 கோடி மதிப்பில் நிதிப் பத்திரங்கள்:

2024-ஆம் நிதியாண்டில் ரூ.4,507.56 கோடி மதிப்பிலான தோ்தல் நிதிப் பத்திரங்களை கட்சிகள் பணமாக மாற்றியுள்ளன. அதில் தேசிய கட்சிகள் ரூ.2,524.14 கோடியை (56 சதவீதம்) தேசிய கட்சிகளும் ரூ.1,796.02 கோடியை (39.84 சதவீதம்) பிராந்திய கட்சிகளும் பெற்றுள்ளன.

இதே நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 3 தேசிய கட்சிகள் மட்டுமே தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest