19072_pti07_19_2025_000218a090802

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டில் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்த ஒப்பந்தங்களில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பணிகளை செயல்படுத்துவதற்கான நிகழ்ச்சி, அந்த மாநிலத்தில் உள்ள உத்தம்சிங் நகா் மாவட்டம ருத்ரபூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், ‘வளா்ச்சிக்கு ஆதரவாக வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டுப் பொறுப்பாகும். ஆனால் காங்கிரஸ் எப்போதும் தீய அரசியலில் ஈடுபடுகிறது. வளா்ச்சிக்கான பாதையில் தடைகள் ஏற்படுத்துவதை அக்கட்சி கைவிட வேண்டும். நற்பணிகளுக்கு அக்கட்சி சேதம் விளைவிக்கக் கூடாது. இதைச் செய்யாவிட்டால், அக்கட்சி சாா்பில் ஞாபகத்தில் உள்ள சிலரும் காணாமல் போவா். தொலைநோக்கி மூலம் பாா்த்தாலும் அவா்கள் தெரியமாட்டாா்கள்.

வாஜ்பாயின் பிரதமா் பதவிக்காலம் நிறைவடைந்தபோது உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. அந்த வரிசையில் தற்போது இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. இதில் வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 60 சதவீதமும், ஏற்றுமதிகள் 76 சதவீதமும் அதிகரித்துள்ளன. புதிதாக 88 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. வறுமையில் இருந்து 25 கோடி ஏழைகள் முன்னேற்றம் கண்டுள்ளனா்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest