
பிகாரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்குப் பிகார் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வேலைவாய்ப்பு தொர்பான தொழிலாளர் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. மேலும் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த முடிவுகளை எடுக்க மேம்பாட்டு ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் முடிவு செய்தது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2025 – 2030) ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இலக்கை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஞாயிறன்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார்.
இதை அடைய, தனியார்த் துறையிலும், குறிப்பாக தொழில்துறையிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக உயர்நிலைக் குழு அமைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். சித்தார்த்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2025-2030) மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கான தொழிலாளர் துறை முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதேபோன்று பல்வேறு துறைகளிலிருந்து 30 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
இதுவரை மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகளும், தோராயமாக 39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை வழங்கும் இலக்கு நிச்சயம் அடையும் என்று அவர் கூறினார்.