
வரும் 2040-ல் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் கூறியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
குலசேகரத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணம் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், இந்திய மண்ணில் இருந்து ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் நமக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும். இந்தியரான ராகேஷ் சர்மா 1984-ல் விண்வெளிக்கு சென்றதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. தற்போது, சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பியுள்ளோம்.
அவர் வந்தவுடன், அவருக்கு விண்வெளியில் கிடைத்த அனுபவங்கள் நமக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், 2040-ல் நிலவில் இந்தியர்கள் தரையிறங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்குரிய பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசுகையில், 2035-ல் விண்வெளியில் நாம் விண்வெளி நிலையம் சொந்தமாக அமைக்கவுள்ளோம். 2040-ல் இந்தியரை நமது ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பி, திரும்பி கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதற்காக 40 மாடி உயரத்துடன், 2,600 டன் எடைகொண்ட ராக்கெட்டை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ராக்கெட் 75,000 கிலோ எடையைச் சுமக்கும். மேலும், 3 ஆண்டுகளில் 155 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் திட்டங்களும் உள்ளன என்று தெரிவித்தார்.