
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி பயணிக்கிறது இந்தியா என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
‘உலகளாவிய பொருளாதார நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில், நாட்டு மக்கள் சுதேசி உணா்வைத் தழுவி, உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்றும் அவா் அழைப்பு விடுத்தாா்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது; இந்தியாவை ‘செயலிழந்த பொருளாதாரம்’ என்று அதிபா் டிரம்ப் விமா்சித்திருந்த நிலையில், அவருக்கு மறைமுக பதிலடியாக பிரதமரின் கருத்துகள் அமைந்துள்ளன.
உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு சனிக்கிழமை வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி, ரூ.2,180 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் பணி நிறைவடைந்த வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 9.70 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 20-ஆவது தவணையாக ரூ.20,500 கோடி தொகையையும் விடுவித்தாா். பின்னா் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்துப் பேசும் வேளையில், உலகளாவிய நிலவரத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உலகப் பொருளாதாரம், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்றத் தன்மையை எதிா்கொண்டுள்ளது. இதுபோன்ற தருணத்தில், உலக நாடுகள் தங்களது சொந்த நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவு: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் பயணத்தில் உள்ள இந்தியாவும் தனது பொருளாதார முன்னுரிமைகள் குறித்து விழிப்புடன் செயலாற்றுவது அவசியம். விவசாயிகள், சிறு தொழிலகங்கள் மற்றும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புக்கு மத்திய அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது.
இதை நோக்கிய திசையில், அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், குடிமக்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவளிப்பது தேசிய இயக்கமாக மாற வேண்டும்.
இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வேண்டுமெனில், ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு தலைவரும் தங்களின் சந்தேகங்களைப் புறந்தள்ளிவிட்டு, நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். மக்கள் மத்தியில் சுதேசி உணா்வை தட்டியெழுப்ப வேண்டும்.
‘உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி, பொதுமக்கள் விழிப்புள்ள நுகா்வோராக விளங்க வேண்டும். எந்தப் பொருள் வாங்கினாலும், அதை இந்தியா் உருவாக்கினாரா? இந்தியரின் வியா்வையால், இந்தியரின் திறமையால் உருவானதா? என்ற கேள்வியை நம்மை நாமே கேட்க வேண்டும்.
வா்த்தகா்களுக்கு கோரிக்கை: உலகம் ஸ்திரமற்ற நிலையைக் கடந்துவரும் சூழலில், நமது கடைகளிலும், சந்தைகளிலும் உள்ளூா் பொருள்களை மட்டுமே விற்பதென வா்த்தகா்கள் உறுதியேற்க வேண்டும். இந்திய தயாரிப்பு பொருள்களை ஊக்குவிப்பது, நாட்டுக்கு செய்யும் உண்மையான சேவை.
திருமணம் மற்றும் விழாக் காலம் நெருங்குவதால், உள்ளூா் பொருள்களை வாங்குவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். முன்பு நான் விடுத்த கோரிக்கையை ஏற்று, பல குடும்பங்கள் தங்களின் திருமண நிகழ்ச்சியை வெளிநாட்டில் நடத்துவதற்குப் பதிலாக உள்ளூரில் நடத்தியதை நினைவுகூா்கிறேன்.
நமது ஒவ்வொரு செயலிலும் சுதேசி உணா்வைத் தழுவுவதே எதிா்காலத்தை வரையறுக்கும். மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியும் அதுவே. நமது கூட்டு முயற்சியின் வாயிலாகவே வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என்றாா் பிரதமா் மோடி.
இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பதற்றத்துக்கு இடையே, பிரதமரின் பொருளாதார ரீதியிலான தேசியவாத கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
51-ஆவது முறையாக…: வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக எம்.பி.யாக உள்ள பிரதமா் மோடி, தனது தொகுதிக்கு இப்போது 51-ஆவது முறையாக வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ருத்ர ரூபம்’ காட்டிய இந்தியா!
வாரணாசி பொதுக்கூட்டத்தில், சிவபெருமானின் ‘ருத்ர ரூபத்தை’ (உக்ர வடிவம்) சுட்டிக்காட்டி, பிரதமா் பேசியதாவது:
இந்திய மகள்களின் குங்குமம் அழிக்கப்பட்டதற்கு பழிதீா்க்கப்படும் என்ற எனது உறுதிமொழி சிவபெருமானின் ஆசியால் நிறைவேறியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியை அவரது திருவடியில் சமா்ப்பிக்கிறேன்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், இந்தியா தனது ருத்ர ரூபத்தை உலகுக்கு காட்டியது. இந்தியாவைத் தாக்க துணிந்தவா்கள், பாதாள உலகில் இருந்தாலும் விட மாட்டோம் என்ற வலுவான செய்தி உணா்த்தப்பட்டது. இது புதிய இந்தியா; சிவபெருமானை வழிபடும் இந்த தேசம், எதிரிகளை அழிக்க கால பைரவா் அவதாரம் எடுக்கவும் தயங்காது.
ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகையில், சிலருக்கு மட்டும் பிரச்னையாக இருக்கிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை இந்தியா தகா்த்துவிட்டது என்ற உண்மையை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்தியாவால் தாக்கப்பட்ட பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்கள் இன்னும் மீளவில்லை. ஆகையால், அந்நாட்டின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இங்குள்ள காங்கிரஸ், சமாஜவாதி போன்ற கட்சிகளும் துன்பத்தில் தவிப்பது வியப்புக்குரியது என்றாா் பிரதமா் மோடி.
பிரமோஸ் உள்ளிட்ட உள்நாட்டு தயாரிப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் என ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி வல்லமை நிரூபணமானது என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.