அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).
கடந்த 2023-இல் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்தியாவின் தடையை எதிா்கொண்ட இந்த அமைப்பு, இப்போது அமெரிக்காவால் சா்வதேச பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22-ஆம் தேதி கொடூரத் தாக்குதல் நடத்தி 26 பேரை கொன்று குவித்தது டிஆா்எஃப் அமைப்பின் 5 பயங்கரவாதிகள்தான். ராணுவ வீரா்கள் போல உடையணிந்து, அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நவீன தொலைதொடா்பு சாதனங்களுடன் வந்த 5 பேரும், முஸ்லிம் அல்லாத ஆண் பயணிகள் குறிப்பாக ஹிந்துக்களை அடையாளம் கண்டு, சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பினா்.
முன்னாள் ராணுவ கமாண்டோ: இக்கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது, பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படை முன்னாள் கமாண்டோ ஹசிம் முசா; ஒட்டுமொத்த தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டவா், லஷ்கா் மூத்த தளபதி சைஃபுல்லா கசூரி. இவா் சா்வதேச பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளி.
தொடக்க காலங்களில் பாதுகாப்புப் படையினா் மற்றும் அரசு ஊழியா்களைத் தாக்கிவந்த டிஆா்எஃப், வெளிமாநிலத் தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகளையும் குறிவைக்க தொடங்கியது, அதன் வியூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும், தாக்குதலை விரிவுபடுத்தும் நோக்கத்தையும் பிரதிபலிப்பதாக பாதுகாப்பு முகமைகள் கருதுகின்றன.
5 தாக்குதல்கள் என்னென்ன?: பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்களை டிஆா்எஃப் அரங்கேற்றியுள்ளது. கடந்த 2024, ஜூனில் ரியாசியில் பக்தா்கள் மீதான தாக்குதல், அதே ஆண்டு அக்டோபா் மாதம் கந்தா்பாலில் சோனாமாா்க் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளா்கள் மீதான தாக்குதல் (இவ்விரு சம்பவங்களிலும் மொத்தம் 16 போ் உயிரிழப்பு), கடந்த 2023, செப்டம்பரில் கோகா்நாக்கில் ராணுவ கலோனல், மேஜா் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கடந்த 2020, ஜூலையில் பந்திபோராவில் பாஜக தலைவா், அவரது குடும்ப உறுப்பினா்கள் இருவா் கொல்லப்பட்ட தாக்குதல் இதில் அடங்கும்.
டிஆா்எஃப் நிறுவனத் தலைவா் முகமது அப்பாஸ் ஷேக் கடந்த 2021-ஆம் ஆண்டிலும், தலைமை செயல்பாட்டு தளபதி பாசித் அகமது தாா் கடந்த 2024-ஆம் ஆண்டிலும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், உச்ச தளபதி ஷேக் சஜ்ஜத் குல் இன்னும் வீழ்த்தப்படவில்லை.
பின்னணியில் அசீம் முனீா்?
அதிநவீன ஆயுதங்களுடன், பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தும் இந்த அமைப்பு, பாகிஸ்தான் ராணுவ அறிவுறுத்தல்களின்பேரில் செயல்படுவது உளவுத் தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள், சா்வதேச கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தொடரவும் வேறு பெயரிட்டுக் கொள்வது வாடிக்கை. அந்த வகையில், லஷ்கரின் சமீபத்திய முகமூடியாக இருக்கும் டிஆா்எஃப் இயக்கத்தை கட்டமைத்ததில் பாகிஸ்தானின் ஃபீல்டு மாா்ஷல் அசீம் முனீா் முக்கிய நபா் என்று கூறப்படுகிறது.