பாடகர் ஸுபீன் கார்க் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடம் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் திரையுலகில் முன்னணி பாடகராகத் திகழ்ந்தவர் ஸுபீன் கார்க் (52). அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்தவர்.

தமிழில், பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற ’உயிரே.. உயிரே’, கஜினியில், ‘சுற்றும் விழிச்சுடரே..’ உள்ளிட்ட பாடல்களைப் பாடியது இவர்தான். பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாலிவுட்டில் பெரிய மரியாதையைச் சம்பாதித்தார். ஹிந்தியில் கேங்க்ஸ்டர் படத்தில் இடம்பெற்ற, ’யா அலி’ என்கிற பாடலுக்கு பல லட்ச ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (செப்.19) ஸுபீன் கார்க் சிங்கப்பூரில் பாராகிளைடிங் விளையாட்டில் ஈடுபட்டபோது கடலில் விழுந்து படுகாயமடைந்ததால் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

அசாமின் அடையாளங்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஸுபீனின் இந்த திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முக்கியமாக, அசாம் மாநில ரசிகர்கள் பலரும் கண்ணீர் சிந்தியபடி இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, இறுதிச்சடங்கிற்காக ஸுபீன் கார்க்கின் உடல் அசாம் மாநிலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை (செப்.23) நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், மாநிலத் தலைநகர் குவஹாட்டியை நோக்கி மக்கள் சென்றுகொண்டே இருக்கின்றனர்.

அங்கு ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனராம். மேலும், அசாமில் இறுதி அஞ்சலியில் அதிக மக்கள் கலந்துகொண்டது ஸுபினின் மறைவுக்குத்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் மறைந்ததிலிருந்து அசாம் மாநிலத்தில் பல பகுதிகளில் மூன்று நாள்களாக கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதே நேரம், பாடகர் ஸுபீன் கார்க் அசாம் மக்களிடம் அசாத்திய செல்வாக்குடன் இருந்தது அவரது மறைவுக்குப் பின்பே பலருக்கும் தெரிய வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

thousands of people attend to last tribute of singer zubeen garg in assam

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest