
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
“தாத்தாவை முதன்முதலா நீ எப்ப பார்த்தே பாட்டி?” – பத்து வயது பேரன் கேட்ட கேள்விக்கு, ‘முளைச்சு மூணு இலை விடலை… கேட்கிற கேள்வியைப் பாரு’ என்ற பதில்தான் என் மனைவியிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், “உங்க தாத்தாகிட்டேயே கேளு. எனக்கு நினைவில்லை” என்றவள் என்னைப் பார்த்தாள் அழுத்தமான பார்வையுடன்.
39 வருட திருமண வாழ்க்கை. பலவிதமான பார்வைகள். பல்வேறு அர்த்தங்கள். தற்போதைய பார்வையில் ஒளிந்திருந்த அர்த்தத்தை என்னால் இனம்காண முடியவில்லை. அது, இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்தியா? எனக்காக தன் சுக துக்கங்களையெல்லாம் தவற விட்ட ஏக்கமா?”தாத்தா நீங்க சொல்லுங்க… எப்ப முதன்முதலா பாட்டியைப் பார்த்தீங்க?” – பேரன் இதுநாள் வரை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்ததில்லை.

“உங்க பாட்டி… பிறந்தவுடனே பார்த்தவன்டா நான்” – உண்மையைச் சொன்னேன்.”ஆமாவா பாட்டி?””அது எனக்குத் தெரியாதுடா? ஆனா, உங்க தாத்தாவோட பாட்டி செத்தப்ப அவங்க ஊருக்குப் போயிருந்தேன். அப்பதான் முதன்முதலா உங்க தாத்தாவை பார்த்ததா நினைவு” என்றாள். இந்தப் பதிலுக்கு பின்னே நடந்தவைதான் இப்போதைய வாழ்க்கையின் தொடக்கம்.
நண்பர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தபோது ஓர் அழகான வாட்ச் கீழே கிடைக்க… அதை யாருக்குக் கொடுக்கலாம் என்று இரவு முழுக்க யோசிக்க… மறுநாள் காலையில் நினைவுக்கு வந்தவள் இவள்தான். சென்னைக்கு வந்ததும் எடுத்துக்கொண்டு போய் கொடுத்தேன்.
“எனக்காக வாங்கிட்டு வந்தீங்களா?” என்றாள். “ஆமாம்” என்று பொய் சொன்னேன். அந்த நாளிலிருந்து என் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஒன்பதாவது படித்தபோது என் போட்டோவைக் கொண்டு போய் தன் வகுப்பு தோழிகளுடன் “இதுதான் நான் காட்டிக்க போறவரு” என்று காட்டியிருக்கிறாள்.
உடன் படிப்பவர்கள்… “சூப்பரா இருக்காருடி” என்று ஏற்றிவிட, என் மீதான ஈர்ப்பு தொடர்ந்திருக்கிறது. போன் வசதியெல்லாம் இல்லை. அடுத்து யார் வீட்டில் விசேஷம் நடக்கும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருப்பேன்.

இந்த நிலையில் என் தங்கையின் திருமணம் நிச்சயமானது. அதற்கான சடங்குகள், அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. ஒருமுறை என் வீட்டுக்கு இவள் வந்திருந்தபோது… அலமாரியில் இருந்த பொருளை எடுக்க முயற்சி செய்ய…
“என்ன வேண்டும்? இரு நான் எடுத்து தர்றேன்” என்று எடுத்துக் கொடுக்க சென்றபோது… எங்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த பாட்டி, “ஜோடி பொருத்தம் சரியாதான் இருக்கும் போலிருக்கு” என்று சொல்ல… அலமாரியில் இருந்த பொருளை எடுத்துக்கொடுக்கும் பாவனையில் இவளை லேசாக உரசிக்கொள்ள பற்றிக் கொண்டது காதல்.
விஷயம் என் மாமனார் காதுக்கு எட்ட, என் அம்மாவிடம் பேசினார். “நீங்க ஓகேன்னா… எனக்கும் சரிதான்” என்று அம்மா பதில் அளிக்க… திருமண நாள் குறிப்பதற்கு முன்பாக ஆரம்பித்தது மிகப் பெரிய சிக்கல்.
உடுக்கை சப்தம் கேட்டால்… ஆட்டம் ஆடும் பழக்கம் இவளுக்குண்டு. என் தந்தைக்குப் பிடிக்காத விஷயம் இது… என்னை அழைத்தார், “என் ஃபிரெண்டு ஒருத்தர் இருக்கார்… அவரை போய் பாரு” என்று அனுப்பி வைத்தார்.
கீழ்ப்பாக்கத்தில் இருந்த அவரைப் பார்க்க சென்றேன். சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு என் திருமண வாழ்க்கைக்கு வந்தார்… “அவளை தவிர வேறு யாரையும் கட்டிக்க மாட்டேன் சார்” என்று அவரிடம் பேசி விட்டு நகர்ந்தேன். ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் திருமணப் பேச்சு வந்தபோது… அப்பா சொன்ன வார்த்தை இதுதான்… “என் தலையெழுத்து இதுதான்னா அதை மாற்ற முடியாது” என்று திருமணத்துக்கு ஓகே சொன்னார்.

அப்பாவுக்கு, என்னை சினிமாவில் நடிக்க வைத்து புகழ் பெற வேண்டும் என்று நிறைய கனவுகள். அனைத்தும் என்னுடைய மூன்று முடிச்சில் முடிந்து போனது. அதற்கு ஆதாரமாக கல்யாணம் முடிந்த கையோடு மதுரைக்குப் போயிருந்தபோது மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரு பெண்மணி என்னையும் என் மனைவியையும் பார்த்து திடுக்கிட்டுக் கேட்டார், “சார் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”
“மன்னிக்கவும் மேடம். நீங்க நினைக்கிற நடிகர் நானில்லை” என்றேன். கேட்டுக் கொண்டிருந்த என் மனைவியின் பெருமித பார்வையும் அன்றைக்கு இரவு… “உனக்கேத்த மனைவி நானில்லையே” என்ற கேள்விக்கு, “உன்னைப் பிடிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மத்தவங்க பேசறதையெல்லாம் விட்டு தள்ளு” என்ற பதிலும் என் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் எதையும் எடுத்து செய்வாள். மற்றவர்களின் பேச்சுகளுக்கும், ஏச்சுகளுக்கும் இதுநாள் வரை இடம் கொடுத்ததில்லை.
தனிக்குடித்தனம், இரண்டு பிள்ளைகள், அவர்களுக்கான படிப்புகள், அப்பா – அம்மா, மாமனார் – மாமியார் இறப்புகள், என் தம்பிகள், அவள் தங்கைகளின் திருமணங்கள், என் பிள்ளைகளின் திருமணங்கள்…
“எப்படிம்மா உன்னால முடியுது?” ஒருநாள் அதிகாலை வேளையில் கேட்டேன்.
“எல்லாம் நீ இருக்கிற தைரியம்தான்” என்ற பதில் வந்தது.
வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், பேரன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக தற்போதைய பார்வையில் ஒளிந்திருந்த அர்த்தத்தை என்னால் இனம்காண முடியவில்லை.
அது, இத்தனை ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்தியா? எனக்காக தன் சுக துக்கங்களையெல்லாம் தவறவிட்ட ஏக்கமா? புரியவில்லை.
புரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே…
–நரேந்திரன்
