
தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 70-க்கும் அதிகமான இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சுங்கச்சாவடிகளின் வழியாகப் பயணம் செய்வதற்கு கார், வேன், லாரி, பேருந்துகள் உள்ளிட்டவை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளும் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திய பின்னரே கடக்க முடியும்.
அரசு பேருந்துகளுக்கு மொத்தமாக தொகை வசூலிக்கப்பட்டு வந்தது.

ரூ.276 கோடி பாக்கி…
இந்த நிலையில், அரசு பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை உரிய காலத்தில் கட்டவில்லை என மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுவட்டம், கயத்தாறு சாலைப்புதூர், நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் குற்றம்சாட்டை முன்வைத்தன.
இந்த 4 சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 276 கோடி என அந்தந்த நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதில், “இந்த நிலுவைத் தொகை கிடைக்காததால் சாலைகளைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாக நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என நிறுவங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது.
அப்போது சுங்கச்சாவடி நிறுவனங்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், “நிலுவைத் தொகை அதிகமாக இருப்பதால் சாலைகளைப் பராமரிக்க இயலவில்லை.
வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் பழுதடைகின்றன.
எனவே, நிலுவைத் தொகையை போக்குவரத்துக் கழகம் விரைவாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.” என்று வலியுறுத்தினர்.
வாதங்களின் முடிவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நிலுவைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தாமல் இருப்பது சரியல்ல.
இதனால் நிலுவைத் தொகை ரூ. 300 கோடியிலிருந்து ரூ. 400 கோடியாக உயர்ந்துவிடும்.
அரசு அதிகாரிகள் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை முழுமையாகப் புரிந்துப் கொண்டு அதை தீர்க்க முன்வர வேண்டும்.
ஆனால், அவர்கள் இதில் அக்கறை இல்லாமல் செயல்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது.
எனவே கப்பலூர, சாத்தூர், கயத்தாறு, நாங்குநேரி ஆகிய சுங்கச்சாவடிகள் வழியாக 10-ம் தேதி முதல் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்கக் கூடாது.
மேலும், சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவல்துறை தலைவர் உரிய உத்தரவை பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவால், நாளை (10-ம் தேதி) முதல் தென் மாவட்டங்களின் நாங்குநேரி உள்ளிட்ட நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
அந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் அரசுப் பேருந்துகளில் பயணித்து வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்தச் சூழலை எதிர்கொள்ள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நெல்லை மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தொடர்புகொண்டபோது, ” நீதிமன்ற உத்தரவு குறித்து சென்னையிலுள்ள போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனால் இந்தப் பிர்ச்னைக்கு உரிய தீர்வு கிடைக்கும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 276 கோடியை செலுத்துவது தொடர்பாக போக்குவரத்துக் கழகத்திடம் பேசி நல்ல தீர்வுடன் வருவதாக அரசு கூடுதல் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இவ்வழக்கை நாளை (ஜூலை 10) விசாரிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நாளை நடைபெறும் விசாரணையில் நல்ல முடிவு எட்டப்பட்டு அப்பகுதியில் வழக்கம் போல அரசுப் பேருந்துகள் இயங்க வேண்டும் என பயணிகள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.