AP25172650789095

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காவது போட்டி மான்செஸ்டரில் வருகிற ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பரபரப்பான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால், தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என தொடரின் ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடரை இழக்காமலிருக்க மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடிவிட்டார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பதால், அந்த டெஸ்ட்டில் அவர் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் கூறியதாவது: மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவாரா என்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அவரால் விளையாட முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். மான்செஸ்டரில் நடைபெறும் போட்டி இந்த தொடரின் முக்கியமான போட்டி. அதனால், ஜஸ்பிரித் பும்ராவை பிளேயிங் லெவனில் சேர்ப்பதற்கு முயற்சி செய்வோம் என்றார்.

இந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் அவர் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரிய வரும் என்றார் கேப்டன் ஷுப்மன் கில். அதேபோல, டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டுமென்றால், கடைசி இரண்டு போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதை அணி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Indian team coach has spoken about whether Jasprit Bumrah will play in the fourth Test against England.

இதையும் படிக்க: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest