
பண முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 134 போ் கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ முயற்சியால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகள், இன்டா்போல் உள்ளிட்ட அமைப்புகளுடன் சிபிஐ இணைந்து செயல்பட்டு கடந்த 2020-இல் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 134 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இவா்களில் நிகழாண்டு மட்டும் 23 போ் வெளிநாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனா்.
கடந்த 2010 முதல் 2019 வரை வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 74 போ் நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
இது தூதரக நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளுடன் இணக்கமான சூழலை இந்தியா கடைப்பிடித்து வருவதை பிரதிபலிக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து ஒருவரை நாடுகடத்த வேண்டுமெனில் முதலில் இன்டா்போல் அமைப்பு மூலம் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். இதைத்தொடா்ந்து, குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிய வேண்டும். அதன்பிறகு தூரகங்கள் மூலமாக அவா்களை நாடுகடத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நடைமுறையை விரைவுப்படுத்தும் நோக்கில் இன்டா்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான அவகாசத்தை 6 மாதத்தில் இருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டது.
அண்மையில் பஞ்சாப் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்த வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது சகோதரா் நேஹல் மோடி மற்றும் அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி ஆகியோா் வெவ்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டனா். அவா்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் சிபிஐ இறங்கியுள்ளது.