cmstalin7aa

சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 16) திறந்து வைத்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 16) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் ரூ.28.33 கோடி மதிப்பீட்டில் 77.86 ஏக்கரில் உருவாக்கப்பட்ட 4 புதிய தொழிற்பேட்டைகளும், கடலூர் மாவட்டம், மருதாடில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் 11.57 ஏக்கரில் புதிய தனியார் தொழிற்பேட்டையும், கோயம்புத்தூர் மாவட்டம், கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியும், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் உணவுப்பதப்படுத்துதல் குழுமத்திற்கான பொது வசதி மையம், என மொத்தம் ரூ.67.34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவோர்களுக்காக ரூ.15.23 கோடி மதிப்பீட்டில் 17.95 ஏக்கரில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 18 தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கு ரூ.34.07 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், என மொத்தம் ரூ.78.57 கோடி மதிப்பிலான 20 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட புதிய நான்கு தொழிற்பேட்டைகளின் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் தொழிற்பேட்டை

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில் 29.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் 74 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு, தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 400 நபர்கள் நேரடியாகவும், 800 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

திருநெல்வேலி மாவட்டம், முத்தூர் தொழிற்பேட்டை

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 33.36 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 91 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளது, இத்தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 24.37 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.58 கோடி மதிப்பீட்டில் 34 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறுவர்.

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடி சிற்பக்கலை பூங்கா

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கடம்பாடி கிராமத்தில் சிற்ப கலைஞர்களுக்காக 21.07 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.39 கோடி மதிப்பீட்டில் 111 தொழில்மனைகளுடன் புதிய சிற்பக்கலை பூங்கா அமைக்கப்பட உள்ளது, இச்சிற்பக்கலை பூங்காவில் முதற்கட்டமாக 11.73 ஏக்கரில் ரூ.4.44 கோடி மதிப்பீட்டில் 66 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு சிற்பக்கலை சார்ந்த தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இச்சிற்பக்கலை பூங்கா உருவாக்கத்தின் மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

திருவாரூர் மாவட்டம், கொருக்கை தொழிற்பேட்டை

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொருக்கை கிராமத்தில் 15.44 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3.57 கோடி மதிப்பீட்டில் 58 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது, முதற்கட்டமாக 12.52 ஏக்கரில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 47 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

இரண்டு தனியார் தொழிற்பேட்டைகள்

கடலூர் மாவட்டம், கடலூர் நகர்புறத்தில் இயங்கிவரும் ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் மருதாடு கிராமத்தில் 11.57 ஏக்கரில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் தனியார் தொழிற்பேட்டை அமைப்பதில் தற்போது ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் 105 தொழிற்மனைகளை உள்ளடக்கிய புதிய தனியார் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 600 நபர்கள் நேரடியாகவும், 1200 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

கோயம்புத்தூர் மாவட்டம், கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் 316.04 ஏக்கரில் ரூ.24.61 கோடி மதிப்பில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.12.30 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.12.30 கோடி ஆகும். இதில் சாலைகள், சிறு பாலங்கள், தண்ணீர் வசதி, நிர்வாக அலுவலகம், தோரண வாயில் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் 585 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சார்ந்த மின்முலாம் பூசும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.2.60 கோடி மதிப்பில் 200 KLD திறன்கொண்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது, இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1.80 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.80 இலட்சம் ஆகும்.

திருச்செங்கோடு பகுதியில் பொது வசதி மையம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியினை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கருமாபுரம் கிராமத்தில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் அதன் மதிப்புக்கூட்டலுக்குத் தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உள்ளடக்கிய உணவுப்பதப்படுத்துதல் குழுமத்திற்கான பொது வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.6.56 கோடி மற்றும் பயனாளிகள் பங்களிப்பு ரூ.1.64 கோடி ஆகும்.

ஆக மொத்தம் ரூ.67.34 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட 8 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.

முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப்பணிகள்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான மேம்பாட்டுப் பணிகள்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் 17.95 ஏக்கரில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) மூலம் சுமார் ரூ.15.23 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் 47 தொழில்மனைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவேர்கள் பயன் பெறுவதோடு சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி

சிட்கோ நிறுவனத்தின் மூலம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் 1.36 ஏக்கரில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் சுமார் 688 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 100 அறைகளுடன் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது. இவ்விடுதியில் பயணிகள் மின்தூக்கியுடன், நன்கு காற்றோட்டமான அறைகள், தாழ்வாரம், தீ பாதுகாப்பு, 24 மணிநேரமும் தண்ணீர் வசதி, விளையாடும் பகுதி, சலவையகம் மற்றும் அனைத்து தளங்களிலும் பொதுவான ஒப்பனை அறை, சமையலறை மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ளது. இதை தவிர ஒவ்வொரு அறையிலும் அலமாரிகள், மின்விளக்கு, மின்விசிறி போன்ற வசதிகளும் அமைக்கப்படவுள்ளது.

இவ்விடுதியானது திருமுடிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்க வசதியாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளது.

18 சிட்கோ தொழிற்பேட்டைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் பராமரிக்கபட்டு வரும் 135 தொழிற்பேட்டைகளில், 18 தொழிற்பேட்டைகளின் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.34.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது.

ஆக மொத்தம் ரூ.78.57 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

பணி நியமன ஆணைகள் வழங்குதல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிட்கோ நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இதையும் படிக்க: மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

Chief Minister Stalin inaugurated 4 new industrial parks set up at a cost of Rs. 28.33 crore today (Sept. 16).

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest