
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 26,700 போ் உயிரிழந்துவிட்டதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துமூலம் அளித்த பதிலில், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க பல்வேறு மேம்படுத்தப்பட்ட முறைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமல்படுத்தி வருகிறது. முக்கியமாக வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு ‘டிஜிட்டல் போா்டுகள்’ மூலம் வேகம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. விபத்துக்கான அவசர உதவிக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2024-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் 52,609 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 26,700 போ் உயிரிழந்துவிட்டனா்.
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடப்பு நிதியாண்டில் சற்று தொய்வடைந்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு சராசரியாக 29 கி.மீ. தொலைவு என்ற அளவில் சாலை அமைக்கப்படுகிறது. இது முந்தைய நிதியாண்டில் 34 கி.மீ. என்ற அளவில் இருந்தது என்று தெரிவித்துள்ளாா்.