
6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
இந்த விவகாரம் பூதகரமாக உருவெடுத்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று(ஆக. 3) வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்திருப்பதாவது:
‘பிகாரில் 65 லட்சம் வாக்களர்கள் நீக்கப்படும் அபாயத்தில் இருக்கும்போது, தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்க்கப்போவதாக வரும் தகவல்கள் சட்டவிரோதமானது, அச்சத்தை ஊட்டுகிறது!
பிகாரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேற்கண்ட வாக்காளர்களை ‘நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள்’ என்று அழைப்பதன் மூலம், இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் தங்களுக்கு விருப்பமான ஆட்சியை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதாகவும் இவ்விவகாரம் அமைந்துள்ளது.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏன் திரும்பவும் பிகாருக்கே செல்ல மாட்டனரா? அவர்கள் திருவிழா காலங்களில் பிகாருக்கு செல்வரே?
வாக்காளராக பதிவு செய்யப்படும் ஒருவருக்கு நிரந்தர விலாசத்துடன் ஒரு வீடு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், இடம்பெயர்ந்துள்ள தொழிலாளருக்கு பிகாரில் (அல்லது வேறொரு மாநிலத்தில்) வீடு உள்ளது. அப்படியிருக்கும்போது, அந்த நபர் எப்படி தமிழ்நாட்டு வாக்காளராக பதிவு செய்யப்பட முடியும்?
இடம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்துக்கு பிகாரில் நிரந்தரமாக ஒரு வீடு இருக்கும்போது, இதன் காரணமாக, அவர் பிகாரில் வசிக்கும்போது, அந்த தொழிலாளரை எப்படி ‘நிரந்தரமாக தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்துள்ளவர்’ என்று குறிப்பிட முடியும்?
இந்திய தேர்தல் ஆணையம் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. தேர்தல் நடத்தை விதிகளை மாற்ற முயற்சிக்கிறது.
இத்தகைய அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளை எதிர்த்து அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராட வேண்டும்’ என்று தமிழ்நாட்டு முதல்வரைக் குறிப்பிட்டு ப. சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.