unnamed

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

படிப்பின் அஸ்திவாரம்

புனித வளனார் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பு ஆறாம் வகுப்பில் இருந்து தான் ஆரம்பம். ஐந்தாம் வகுப்பு வரை படிக்க புனித மேரிஸ் தோப்பில் ஒரு ஆரம்பப்பள்ளி இருந்தது. இது தவிர்த்து எஸ். ஆர்.சீ என சுறுக்கமாக அழைக்கப்படும் சீதாலக்ஷ்மி பெண்கள் கல்லூரி செல்லும் வழியில் பட்டவர்த் சாலையிலும் ஒரு ஆரம்ப பள்ளி இருந்தது.

ஆரம்ப பள்ளிக்கு எங்கள் காலனியில் இருந்து அனேகர் தெப்பக்குளம் நந்தி கோவில் தெருவில் அமைந்துள்ள ஈஆர் எலிமெண்ட்ரி பள்ளிக்கே சென்றோம். இது தவிர்த்து நான் அறிந்து தேவா என்ற ஒரே ஒரு பையன் மட்டும் ஈ ஆர் எலிமெண்ட்ரி பள்ளியின் கிளையான நங்கவரம் ப்ளாக்கில் ஆரம்ப படிப்பை முடித்தான். நான் துவக்கப் பள்ளியில் சேர்ந்தபொழுது பால் பற்கள் விழும் காலம். விழுந்த பற்களை மண்ணில் குழி தோண்டி புதைத்து வைப்போம். அந்த பல் வானம் பார்த்துவிட்டால் திரும்ப முளைக்காது என்று நம்பிய காலம்.

ஈஆர் எலிமென்டரி பள்ளியின் முதல் வகுப்பு ஆசிரியர் தான் எங்கள் அடிமட்ட அறிவையும் இன்றைய நிலையில் இருக்கும் அறிவிற்கும் அடிப்படை வித்திட்டவர். தரையில் அமர்ந்து ஒன்றாம் வகுப்பு படித்தோம். தரையில் அமர நீண்ட தடுக்கு போடப் பட்டிருக்கும். எழுத வசதியாக சிறு டெஸ்க்கும் இருக்கும். ஆனால் உண்மை சொல்வதென்றால் ஒன்றாம் வகுப்பில் நான் படித்தது என்ன என்று எனக்கு ஞாபகமே இல்லை. சிலேட்டும் சிலேட்டில் எழுத பென்சிலும் கொண்டு செல்வோம். சிலேட்டுகள் கல்லினால் செய்யப்பட்டிருக்கும். சிலர் தகர சிலேட்டுகள் கொண்டு வருவார்கள். மூன்றாம் வகுப்பில் இருந்தே நோட்டும் காகித பென்சிலும்.

ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்பிற்கு தேர்வு முடிந்து செல்லும் பொழுது தலைமை ஆசிரியர் ஒரு ரிஜிஸ்டரில் இருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பெயரை ஒவ்வொன்றாய் வாசிப்பார். அப்பொழுது எலிமென்டரி வகுப்புகளாய் இருந்தாலும் தேர்ச்சி பெறாதவர்களை அதே வகுப்பில் தக்க வைக்கும் முறை இருந்தது.

இரண்டாம் வகுப்பு ஆசிரியர் கிராப் வைத்திருந்தார். சைக்கிளில் அவர் பள்ளிக்கு வருவார். அவரை நான் சைக்கிள் ஓட்டி பார்த்ததை விட சைக்கிளை தள்ளிக் கொண்டு நடந்து சென்றதை பார்த்ததே அதிகம். முதல் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்கள் குடுமி வைத்திருந்தனர். அந்த ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த மதிப்பிற்குரியவர்கள்.  மரியாதை செலுத்தப் பட வேண்டியவர்கள்.

ஈ.ஆர். எலிமென்டரி பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை கோ எட் இருந்தது. ஆண்களும் பெண்களும் ஒன்றாக படிக்கலாம்.. நான்காம் வகுப்பில் இருந்து பெண்குழந்தைகள் சீதாலக்‌ஷ்மி தொடக்கப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

எங்கள் நான்காம் வகுப்பு ஆசிரியரே ராமாயணம், மகாபாரத கதைகளை எங்களுக்கு புகட்டினார். அவர் அந்த இளம் வயதில் சொல்லிய கதைகள் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்து விட்டன.

ஐந்தாம் வகுப்பில் கண்ணகி பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கும் பாடம் தமிழ் புத்தகத்தில் இருந்தது. ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் அந்த நாடகத்தை வகுப்பு மாணவர்களை கொண்டு நடத்தலாம் என்று திட்டமிட்டார். மன்னன் நெடுஞ்செழியனாக நான் நடிக்க தேர்ந்தெடுக்கப் பட்டேன். சுட்டு போட்டாலும் எனக்கு நடிக்க தெரியவில்லை; நடிக்க வரவில்லை. அந்த நாடகம் கடைசி வரை நடை பெறவே இல்லை.

நான் வீட்டில் இருந்து பள்ளி கிளம்பி இரண்டாம் வகுப்பு வரை என் அண்ணன் ஒருவருடன் செல்வேன். நான் மூன்றாம் வகுப்பு சென்ற பொழுது அந்த அண்ணன் ஆறாம் வகுப்பில் சேர்ந்து விட்டார். எனவே மூன்றாம் வகுப்பில் இருந்து காலனி தோழர்களுடனோ அல்லது தனியாகவோ பள்ளிக்கு செல்லத் தொடங்கினேன். காலனியில் இருந்து கிளம்பி பள்ளி போகும் வரை சுவர்களில் ஒட்டி இருக்கும் சினிமா சுவரொட்டிகள் பார்த்த படியே செல்வோம்.

சிறார்களிடையே பிரபலமாய் இருந்த நடிகர்கள் சிவாஜியும், எம்ஜிஆரும் தான். சிவாஜி நடித்த படம் பார்த்தால் சிவாஜியை விட பெரிய நடிகர் யாரும் கிடையாது என்று போட்டி போடுவோம். அது போல் எம்ஜிஆர் நடித்த படம் பார்த்த பின் எம்ஜிஆரை அடித்துக் கொள்ள வேறு யாரும் இல்லை என்று சண்டை இட்டுக் கொள்வோம்.

ஒரு முறை எங்கள் தந்தையார் விளையாடிக் கொண்டிருந்த என்னை அழைத்து எங்கள் தாயாருடன் சினிமா பார்க்க அனுப்பினார். அப்பொழுது நான் எம்ஜிஆர் ரசிகனாய் இருந்த நேரம். அழைத்துப் போனதோ சிவாஜி படம். படத்தில் முதல் ஐந்து நிமிடம் படம் பார்க்காமலே இருந்தேன். பின்னர் தான் படம் பார்க்க தொடங்கினேன். படம் முடிந்த பின் மீண்டும் சிவாஜி ரசிகனாகி விட்டேன். இடைவேளையில் கடலை மிட்டாய், முறுக்கு, காஃபி எல்லாம் திரை அரங்கினுள் வந்தே விற்பார்கள். அம்மா இடைவேளையில் கட்டாயம் காஃபி குடிப்பார்.  வீட்டில் பனை வெல்ல காஃபி தான் போடுவார்கள்.

எழுபதுகளிலும் எண்பதுகளில் திருச்சி

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஆண்களுக்கென திருச்சியில் பல கல்லூரிகள் இருந்தாலும் பெண்களுக்கென ஹோலி கிராஸ் கல்லூரியும் எஸ் ஆர் சி கல்லூரி மட்டுமே இயங்கி வந்தன. பின்னரே மகளிருக்கென இந்திரா காந்தி கல்லூரியும் காவேரி கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டன. ஜோசப் கல்லூரியிலும் பிஷப் ஹீபர் கல்லூரியிலும் இப்போது பெண்களும் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர்.

அதே போல் எண்பதுகள் வரை சத்திரம் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. மெயின் கார்ட் கேட் என்பதே டவுன் பஸ்களின் டெர்மினசாக அதாவது கடைசி பேருந்து நிறுத்தமாக இருந்தது.

அதனால் தில்லைநகர், உறையூர், ராமலிங்கநகர்,பாலக்கரை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லும் மற்றும் கருமண்டபம்,கேகே நகர், பீஹெச் ஈஎல்,ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் லால்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் மெயின்கார்ட் கேட்டில் இருந்தே புறப்பட வேண்டும்.

மாலை வேளைகளில் மெயின் கார்ட் கேட் மிகவும் பரபரப்பாக இருக்கும். அரசாங்க பேருந்துகள் சில ஓட அவற்றுடன் போட்டி போட தனியார் பேருந்துகள் நிறைய இருந்தன. டீ வி எஸ் பேருந்துகள் சரியான நேரத்துக்கு நிறுத்தம் வரும் என்று நம்பப்பட்டது. டீ.வி.எஸ் பேருந்து நிறுத்தம் வரும் நேரம் பார்த்து கைகடிகார நேரம் சரி செய்து கொள்ளலாம் என்று சொல்வார்கள்.

பேருந்தை விரும்பாத சில மாணவர்களும் மாணவியரும் புகைவண்டியில் செல்வர். லோக்கல் என்று அழைக்கப்படும் இந்த புகைவண்டிகள் கோட்டை ஸ்டேசனில் இருந்தும் டவுன் ஸ்டேசனில் இருந்தும் செல்லும். கோட்டை ஸ்டேசனில் இருந்து கரூர் வரை ஒரு பயணிகள் புகைவண்டி  செல்லும். டவுன் ஸ்டேசனில் இருந்து ஒரு பயணிகள் புகைவண்டி ஸ்ரீரங்கம் வழியாக லால்குடி வரை செல்லும். டவுன் ஸ்டேசன் எஸ் ஆர்.சி கல்லூரி மாணவியருக்கு வசதியாயும் கல்லூரிக்கு அருகிலேயும் அமைந்து இருந்தது.

ஆனால் லால்குடி லோக்கலில் வரும் மாணவரும் மாணவியரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சினை அடிக்கடி நடைபெறும் செயின் புல்லே ஆகும். ஆம். அந்த லோக்கல் வண்டி காவேரி பாலத்தின் மேல் வரும் பொழுது சில விஷமியர் புகைவண்டியை நிறுத்த செயினை இழுத்து விடுவார்கள். பாலத்தின் மேல் நின்று விடும் புகைவண்டியை மீண்டும் ஓடும் நிலைக்கு கொணர கார்ட் எனப்படும் வண்டி பாதுகாவலர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவர் இதனால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் வரும் மாணவர்களும் மாணவியரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். மேலும் வகுப்புகளுக்கு அதிக நாட்களில்தாமதமாக வருவார்கள்.

வயலூர் சாலையில் இப்பொழுது அமைந்து, நாள் முழுவதும் பரபரப்பான போக்குவரத்தை கொண்டிருக்கும் குமரன் நகர், ஸ்ரீனிவாச நகர் எல்லாம் எழுபதுகளில் விரும்பப்பட்ட குடியிருப்பு பகுதிகளாய் இல்லை.

சிறு மழைக்கும் ஏற்பட்ட வெள்ள அபாயங்களால் அப்பகுதிகள் குடியிருக்க அவ்வளவாக விரும்பப் படவில்லை. இன்றைய தேதியிலிருந்து பத்து வருடங்கள்  முன்பே உய்யக்கொண்டான் கால்வாயின் கரை உயர்த்தப்பட்டு இப்போது வெள்ள அபாயம் வெகுவாக குறைந்துள்ளது. 

இப்பொழுது வயலூர் ரோடில் ஒரு  கோடிக்கும் அதிக விலைக்கு விற்பனையாகும் மனைகள் எல்லாம் எழுபதுகளில் முப்பதாயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. முப்பதாயிரத்துக்கும் மனைகளை வாங்குவோர் அதிகம் இல்லை.

எழுபதுகளில் மலைகோட்டையையும் லூர்து மாதா கோவிலையும், ஸ்ரீரங்கத்தையும் பார்க்க அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பயணிகள் வருவார்கள். 

மெயின்கார்ட் கேட்டின் நடு மையமாக தபால் நிலையம் அமைந்திருந்தது. தபால் நிலையத்தை ஒட்டியிருந்த ஒரு அரச மரநிழலில் ஒருவர் இளநீர் கடை போட்டிருப்பார். அப்பொழுதெல்லாம் வீடுகளில் க்யாஸ் அடுப்புகள் அதிகம் இல்லை. சீமெண்ணையோ, விறகோ, மரத்தூள் கொண்டோ அல்லது மாட்டு சாணியில் செய்யப்படும் வரட்டி கொண்டோ தான் வீடுகளில் சமையல் நடைபெறும்.

எங்கள் வீட்டில் மழைக்காலங்களிலும் குளிர் காலங்களிலும் குளிக்க சுடுநீர் கிடைக்கும். எண்ணிக்கையில் அதிக நபர்களை கொண்டு இருந்ததால் சுடுநீர் விறகடுப்புகளிலோ தேங்காய் மட்டைகள் கொண்டோ தயாரிக்கப்படும். அந்த இளநீர் கடைக்காரரிடம் பேசி எங்கள் அப்பா தேங்காய் மட்டைகளை ஒரு விலை கொடுத்து வாங்கி கொள்வார்.

பச்சையாய் இருக்கும் இந்த மட்டைகளை நன்கு  காயப்போட்டால், காய்ந்தபின் அவற்றை போன்ற தரமான மற்றும் விலை கம்மியான எரிபொருள் வேறு எதுவும் கிடையாது.  இந்த தேங்காய் மட்டைகளை காயப்போடும் பொழுது மழை வந்தால் போயிற்று. மட்டைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும். மழை நின்றபின் ஒவ்வொரு மட்டையாக தேடி எடுத்து வந்து மீண்டும் காயப்போடுவோம்.

எங்கள் குடும்பம் பெரிய குடும்பமாக இருந்ததால், ஒரு வருட தேவைக்கேற்ற நெல்லை எங்கள் அப்பா வாங்கிவிடுவார். வாங்கிய நெல், குதிர் என்று சொல்லப்படும் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்படும். தேவைக்கேற்ப நெல்லை வெளியில் எடுத்து அவித்து வைத்துக் கொள்வோம். நெல் அவிக்கும் பொழுது உதவிக்கு அம்மாவின் தங்கை உறவில் இருக்கும் குழந்தையம்மா என்ற ஒருவர் வருவார்.

நெல் அவித்த பின் அவித்த நெல்லை எடுத்து காயப்போடுவோம். அவித்த நெல் காய ஒரு வாரம் எடுக்கும். பின்னர் அவித்த நெல்லை அரைத்து வர  மெஷினுக்கு கொண்டு போவோம். அதை அரைத்து வர மில்லில் இருந்து ஒருவர் மாட்டு வண்டியில் வருவார். மூட்டையை ஏற்றிக் கொண்டு போய் அரைத்தபின் அரிசியாக கொண்டு வந்துவிடுவார்.

நான் ஒரு முறை அந்த மாட்டு வண்டியில் மில் வரை போய் வந்திருக்கிறேன். அந்த நெல் அரைத்த உமி மாட்டு வண்டி காரருக்கு வண்டி வாடகையாகி விடும். 

அத்துடன் அம்மாவிற்கு பிரசவம் பார்ப்பதும் இந்த குழந்தையம்மா தான். எனக்கு பின்னால் பாஸ்கால் என்ற சிறுவனும் வனஜாவும் பிறந்தனர். பாஸ்கால் இளம் பிள்ளை வாதத்தில் அடிபட்டவன். மேலும் மூளை வளர்ச்சி குறைந்தவன். பசி எடுத்தால் அழுவான். உட்கார வைத்தால் தரையில் உட்கார்ந்து கொள்வான். மற்றபடி சேலையில் கட்டப்பட்ட  தொட்டிலில் தூங்கிக் கொண்டே இருப்பான். சிறு வயதிலேயே இறந்து விட்டான்.

பாஸ்காலுக்கு அடுத்தபடி பிறந்தவள் எனது கடைசி தங்கை வனஜா. வீட்டின் செல்லப் பிள்ளை.

நான் சிறுவனாக இருந்த பொழுது தான் என். எஸ். பீ சாலையிலும் புத்தூரிலும் சிந்தாமணி கூட்டுறவு சூப்பர் மார்க்கட் தொடங்கப்பட்டது. அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டும் அதே கால கட்டத்தில் துவங்கப்பட்டாலும் அமராவதி சூப்பர் மார்க்கெட் ரேஷன் கடையாகவே அதிகம் செயல் பட்டது. சிந்தாமணி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் பத்து ரூபாய் செலுத்தி ஒரு உறுப்பினர் அட்டை பெற்றுக் கொள்ளலாம். பொருட்கள் வாங்கும் பொழுது உறுப்பினர் அட்டையை காண்பித்தால் இரண்டு சதவிகித தள்ளுபடி கிடைக்கும்.

உறுப்பினர் அட்டை மறந்து சென்றால், சில நேரங்களில், விற்பனையாளரிடம் உறுப்பினர் எண்ணை சொல்லித் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் தான் முதன் முதலாக 24 மணி நேர மருந்து விற்பனை துவங்கப்பட்டது. அத்துடன் அங்கு தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளும் விற்பனைக்கு கிடைக்கும்.

சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் காய் கறி விற்பனை பிரிவும் உண்டு. இவை எல்லாம் தவிர்த்து சிந்தாமணியில் அதிக அளவும் பரபரப்பாகவும் விற்பனை நடைபெறுவது பாப் கார்ன் எனப்படும் சோளப்பொறியே ஆகும்.

இதே காலக்கட்டத்தில் தான் இப்போதைய சாரதாஸ் எதிரே கீதாஸ் எனும் துணிக்கடை துவங்கப்பட்டது. இலங்கையில் இருந்து வந்த ஒருவர் – திரு. ஃபெர்னாண்டோ என்று நினக்கிறேன் – கீதாசை தொடங்கினார். முதன் முதலில் கடையினுள் லிஃப்ட் வைத்து கடை துவங்கப்பட்டது.

ஞாயிற்று கிழமைகளில் இக்கடை உரிமையாளர்கள் பளபளக்கும் ஒரு அம்பாசிடர் மோட்டார் காரில் கல்லூரி கோவிலுக்கு மாலைத் திருப்பலியில் பங்கேற்க குடும்பத்துடன் வருவார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. கீதாஸ் என்ற கடை முயற்சி என்ன முயன்றும் வெற்றி பெறவே இல்லை. அதுமட்டும் அல்லாமல் அந்த இடத்தில் நிறுவப்பட்ட வேறு எந்த ஸ்தாபனமும் வெற்றி பெறவில்லை. 

எழுபதுகளின் தொடக்கத்தில் தான் பெங்காலி ஸ்வீட் ரகங்கள் சந்தைக்கு வரத்தொடங்கின. என்.எஸ்.பீ  ரோடில் அமைந்த வசந்த பவன் தான் திருச்சியில் இனிப்பகங்களின் முன்னோடி. மாலை வேளைகளில் ஷோலா பூரியும் மசாலா பால் வியாபாரமும் வெகு ஜோராக நடக்கும்.

சில நேரங்களில் வசந்த பவனில் உணவு உண்ண உட்கார, காத்திருக்க வேண்டிய அளவு கும்பல் இருக்கும். வசந்த பவனுக்கு போட்டியாக மேலரண் சாலை எனப்படும் வெஸ்ட் புலிவார்ட் ரோடில் சாந்தி பவன் துவங்கினார்கள். இந்த இரு கடைகளுக்கு முன்னர் திருச்சியில் லாலா கடையில் தான் இனிப்பு காராசேவ், லட்டு போன்ற இனிப்பு வகைகள் கிடைக்கும். அல்லது வீட்டில் செய்யும் பலகாரங்களான அதிரசம், நெய் உருண்டை, தேங்காய் பர்பி போன்றவையே அதிகம் சந்தையில் இருக்கும். லாலா கடைகளை விட்டால் கார வகைகளுக்கு மட்டன் சம்சா சாப்பிட பிலால் ஹோட்டலும் மட்டன் பஃப்ஸ் வாங்க சிங்காரத்தோப்பில் அமைந்திருந்த ராயல் ஹோட்டலும்  விஷேசமாய் இருந்தன. சிங்காரத்தோப்பில் அமைந்திருந்த மெட்ரோ ஹோட்டலும் டீக்கும் மைதாவால் செய்யப்பட்ட இனிப்பு பிஸ்கட்டுக்கும் பெயர் போனது.

வசந்த பவன், சாந்தி பவன் தோன்றிய காலக் கட்டத்திலேயே ஒரு பிராமணர் சிந்தாமணி அருகில் சாலை ஓரத்தில் வடையும் பஜ்ஜியும் போடுவார். அவருக்கு உதவியாக அவர் மகனும் இருப்பார். ஒரு ரூபாய்க்கு பத்து வடை கிடைக்கும். நாங்கள் அந்த கடைக்கு ரெகுலர் வாடிக்கையாளர்களாய் இருந்ததால் ஒரு ரூபாய்க்கு வடை வாங்கினால் ஒரு வடை கூட கிடைக்கும். அவர் போடும் கத்திரிக்காய் பஜ்ஜி மிக பிரசித்தம். பக்கோடாவும் அவர் கடையில் கிடைக்கும். நாலு மணிக்கு கடை போடும் அவர் எட்டு மணிக்கெல்லாம் கடையை மூடிவிடுவார். அத்தனையும் விற்று தீர்ந்திருக்கும்.

அன்புடன்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest