மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் செüத்ரி மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதில்:
8-ஆவது மத்திய ஊதியக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாநிலங்களிலிருந்து முக்கிய பங்குதாரர்களிடமிருந்து உள்ளீடுகள் கோரப்பட்டுள்ளன.
8-ஆவது மத்திய ஊதியக் குழு அறிவிக்கப்பட்டவுடன் அக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். 8-ஆவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டவுடன் அவை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.