
கிடா விருந்து, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை, ஊரெங்கும் விளம்பரங்கள், வீடு வீடாக அழைப்பு என்று களைகட்டி வருகிறது மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு.

முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திய விஜய், சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இரண்டாவது மாநில மாநாட்டை தமிழகத்தின் அரசியல் மையமான மதுரையில் நடத்த முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டுக்கான வேலைகளைப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தங்கப்பாண்டி, கல்லாணை ஒருங்கிணைப்பில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காவல்துறையினர் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு, முக்கியமாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முதலில் அறிவிக்கப்பட்ட தேதி மாற்றப்பட்டு வருகின்ற 21 ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று கட்சித் தலைமையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.

வாஸ்துபடி தெற்கு திசை பார்த்து 200 அடி நீளமும் 60 அடி அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நிர்வாகிகள் 200 பேர் அமர வைக்கப்படுவார்கள். விஜய் நடந்து சென்று தொண்டர்களைப் பார்ப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் மாநாட்டில் முதலில் கொடியேற்றும் நிகழ்ச்சி பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கைப் பாடல், தீர்மானங்கள் நிறைவேற்றுதலைத் தொடர்ந்து விஜய் உரையாற்ற உள்ளார்.

மாநாட்டில் ஆண்கள் 1,20,000 ஆயிரம் பேரும், பெண்கள் 25 ஆயிரம், முதியவர்கள் 4500, மாற்றுத்திறனாளிகள் 500 பேரும் கலந்து கொள்வார்கள் எனவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால் அதற்கான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் மொத்தம் 1.50 லட்சம் நாற்காலிகளுடன், மாற்றுத்திறனாளிகளுக்கென சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொருவருக்கும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. 400 தற்காலிக கழிப்பறைகள், 50-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள், தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள், 420 ஒலிபெருக்கிகள், 20,000 மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளது, மாநாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்காக 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்று நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ உதவிக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதிக்காக சுகாதாரத் துறையிடம் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவ வசதிகளுடன் தனியார் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 12 அவசர கால வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளதாகவும், பாதுகாப்புப் பணிக்காக தனியார் நிறுவன பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பத்மஸ்ரீ வேலு ஆசானின் கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது ஒருபக்கமென்றால், தொழிலாளர்கள், வியாபாரிகள், வர்த்தக அமைப்பினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்ததோடு, வீடு வீடாகவும் சென்று அழைப்பிதழ் கொடுக்கிறார்கள். மதுரையின் முக்கிய வழிபாட்டுத் தலங்களான புனித மரியன்னை ஆலயம், தெற்குவாசல் பள்ளி வாசலில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பிரார்த்தனை செய்து மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கினார். நேற்று பெருங்குடி அருகே மலையாண்டி கருப்பசாமி கோயிலில் கிடா வெட்டி வழிபட்டனர். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாநாட்டுக்கான நாட்கள் நெருங்க நெருங்க பாரபத்தி- ஆவியூர் பகுதி பரபரக்கத் தொடங்கியிருக்கிறது.