Gu1D4n2W4AA1ehf

கேரளத்தில் வாக்கு முறைகேடு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினரை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலத்தின் திரிசூரில் உள்ள சக்தன் தம்புரான் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமையில் மாலை அணிவிக்க அத்தொகுதி எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், திரிசூர் தொகுதியில் வாக்கு முறைகேடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், உங்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும். நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? நான் அமைச்சர்; எனக்கு முடிக்க வேண்டிய பணிகள் உள்ளன. பதிலளிக்க வேண்டியவர்கள் பதிலளிப்பார்கள். அல்லது இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் செல்லும்வரையில் காத்திருங்கள். அல்லது அதற்கு பதிலாக, குற்றச்சாட்டுகளை எழுப்பிய சில வானரங்களிடம் (குரங்குகள்) கேளுங்கள்’’ என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு கேரளத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரின் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அம்மாநில கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிகாரில் வாக்குகள் திருடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வரும்நிலையில், இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பேரணியும் நடைபெற்று வருகிறது.

பிகார் மட்டுமின்றி, 2024 மக்களவைத் தேர்தலின்போது கேரள மாநிலத்தின் திரிசூர் தொகுதியில் வாக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன.

இதுகுறித்து, அத்தொகுதி எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில்தான், எதிர்க்கட்சிகள் குறித்த அவரின் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு அஞ்சி பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம்!

Kerala Minister slams Suresh Gopi’s ‘Vanara’ remarks in voters’ list manipulation issue

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest