gujarat-chemical-edi

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள கோகம்பா தாலுகாவிலுள்ள ரஞ்சித்நகர் பகுதியில் செயல்பட்டுவரும் குஜராத் ஃபுளூரோ ரசாயன ஆலையில், நச்சுத்தன்மை வாய்ந்த வாயு இன்று வெளியேறியது.

முன்னதாக ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதாகவும், அதிலிருந்து நச்சு வாயு வெளியேறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தத் தகவல் பொய்யானது என்றும் நச்சு வாயு மட்டுமே வெளியேறியுள்ளதாகவும் ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரையிலான நேரத்தில் குளிரூட்டிகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆர்-32 என்ற நச்சு வாயு, பழுப்பில் இருந்து கசிந்ததாகக் கூறப்படுகிறது.

ஆலைக்குள் நடந்த இந்த சம்பவத்தால், தொழிலாளர்கள் பலருக்கு குமட்டல், தலைசுற்றல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. நிறுவனத்தின் உள் சுகாதாரக் குழு உடனடியாக மாற்று மருந்துகளை வழங்கி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பியது.

அதே நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து தொழிலாளர்கள் பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆலை நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டபோதிலும், ஒரு தொழிலாளி வாயுக் கசிவால் உயிரிழந்ததாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தில்லியில் 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

One dead, 12 hospitalised after toxic gas leak at Gujarat Fluoro Chemical Company

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest