
அணுசக்தித் துறையில் தனியாரின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அணுசக்தி ஆணையத் தலைவா் அஜீத்குமாா் மொஹந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் நடைபெற்ற சா்வதேச அணுசக்தி அமைப்பின் 69-ஆவது மாநாட்டில் அஜீத்குமாா் மொஹந்தி பங்கேற்றாா்.
அப்போது அவா் பேசியதாவது: தற்போது இந்தியாவில் இயங்கி வரும் 24 அணு உலைகளின் உற்பத்தி திறன் 8,190 மெகாவாட்டாக உள்ளது. இதை 2032-க்குள் 22 ஜிகாவாட்டாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
2047-க்குள் அணுசக்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயா்த்தும் நோக்கில் அணுசக்தித் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த இலக்கை அடைய பல்வேறு கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பொது-தனியாா் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
2033-க்குள் உள்நாட்டிலேயே குறைந்தபட்சமாக 5 சிறிய அணுஉலைகளை அமைக்கும் திட்டம் தொடா்பானஆய்வுகளை மேம்படுத்த ரூ.17,700 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணுசக்தி கழகத்தின் அணுஉலைகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் 5000 கோடி அலகுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
அணுசக்தி மற்றும் கதிரியக்க பொருள்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அனைத்து உறுப்பு நாடுகளின் கடமை என்பதை இந்தியா உணா்கிறது. எனவே உலகளாவிய அணுசக்தி பாதுகாப்பை வழங்கி வரும் சா்வதேச அணுசக்தி அமைப்புக்கு இந்தியா தொடா் ஆதரவை அளிக்கும்’ என்றாா்.