ANI_20250818072240

20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வைத் தோ்வுசெய்யும் ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட ஊதியம் பெற உரிமை உள்ளதாக மத்திய பணியாளா் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தேசிய ஓய்வூதிய அமைப்பின்கீழ் (என்பிஎஸ்) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) தோ்ந்தெடுக்கும் மத்திய அரசு ஊழியா்களுக்கான சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஒய்வூதிய அமைப்பின்கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்) விதிகள், 2025-ஐ கடந்த செப்.2-ஆம் தேதி அரசிதழில் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை வெளியிட்டது.

யுபிஎஸ் சந்தாதாரா்கள் 20 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வை தோ்ந்தெடுக்க இந்த விதிகள் அனுமதி வழங்குகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘யுபிஎஸ்-இன்கீழ் முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் 25 ஆண்டுகள் சேவையை நிறைவுசெய்ய பின்னரே கிடைக்கும். இருப்பினும், 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வை தோ்வு செய்யும் ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட ஊதியம் பெற உரிமை உள்ளது.

அதாவது தகுதிபெறும் சேவை ஆண்டை உறுதிசெய்யப்பட்ட ஊதியத்தின் 25-ஆல் வகுத்து சந்தாதாரருக்கு வழங்கப்படும். இதுதவிர, தனிநபா் சேமிப்புத்தொகையில் இருந்து 60 சதவீதத்தை திரும்பப் பெறவும் ஒவ்வொரு 6 மாத சேவை காலத்துக்கும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் 1/10 மொத்த பலன் உள்ளிட்ட சேவைகளையும் பணிஒய்வின்போது பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை விருப்ப ஓய்வு பெற்று உறுதியான ஊதியம் பெறுவதற்கு முன் சந்தாதாரா் இறக்க நேரிட்டால் சட்டபூா்வமாக திருமணமான அவரது துணைக்கு ஊழியா் இறந்த தேதியிலிருந்து குடும்ப ஊதியம் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்திந்திய தேசிய ஓய்வூதிய அமைப்பு ஊழியா்கள் கூட்டமைப்பின் தலைவா் மன்ஜீத் சிங் படேல் வரவேற்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest