
கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அந்த மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்துக்கு கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் சேத்தன் குமார் மீனா தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில், வைக்கம் நகர் மன்றத் தலைவர் பிரீத்தா ராஜேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, தமிழில் கேரள முதல்வர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.
பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.