
நாடாளுமன்றத்தில் பேசும்போது கனிமொழி, கர்ஜனை மொழியாக மாறுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்துள்ள செயல் வீரர் செந்தில் பாலாஜி எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப். 17) பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
”இது கரூர் அல்ல திமுகவூர். உயிரோடு கலந்திருக்கும் கலைஞர் கருணாநிதியை பிரதிபலிக்கும் தொண்டர்கள் இங்கு கூடியுள்ளனர்.
கொட்டும் மழையில்தான் திமுகவை தொடங்கி வைத்தார் அறிஞர் அண்ணா. தற்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முப்பெரும் விழாவுக்காக தொண்டர்கள் நிற்கின்றனர்.
கரூரில் முப்பெரும் விழா நடத்த வேண்டும் என செந்தில் பாலாஜி அனுமதி கேட்டார். நான் அனுமதி கொடுத்தேன். முப்பெரும் விழாவுக்கு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளார் செயல் வீரர் செந்தில் பாலாஜி. திமுக வரலாற்றில் இப்படியொரு முப்பெரும் விழா நடைபெற்றது இல்லை.
பொதுக்கூட்டம் எனக் கூறி மாபெரும் எழுச்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ள செந்தில் பாலாஜியை முடக்கப்பார்த்தனர்.
ஆனால், அவர் செய்ய வேண்டியவற்றை சிறப்பாக செய்து முடிப்பார்.
கனிமொழி பார்ப்பதற்குதான் கனிமொழி. நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி.
நாடே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் அரசை உருவாக்கி என்னை முதல்வராக்கியுள்ளீர்கள். கடந்துவந்த பாதையின் மேடு பள்ளங்களை பரிசீலித்து எதிர்கால பாதையை வெற்றிப்பாதையாக்க ஒன்றுகூடியுள்ளோம்” எனப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க | திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!