
பாகிஸ்தானிலிருந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஜப்பானுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பாகிஸ்தானின் சியல்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் சென்றடைந்த கால்பந்தாட்ட குழு மீது, ஜப்பான் பாதுகாப்புத் துறைக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
அதன் அடிப்படையில், அந்தக் குழுவை காவல்துறை விசாரித்திருக்கிறது. அவர்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்திருக்கிறது.
அப்போதுதான், அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதும், வந்திருந்த குழுவினர், கால்பந்தாட்ட வீரர்கள் போல நடிக்கச் செய்திருக்கின்றனர் என்பதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, அந்தக் குழுவை ஜப்பான் அரசு நாடு கடத்தியது. இது தொடர்பாக பாகிஸ்தானின் பெடரல் புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், “பாகிஸ்தானின் 22 பேர் கொண்ட குழு, கால்பந்து அணியாக நடித்து சியால்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு சென்றிருக்கின்றனர்.
இருப்பினும், ஜப்பானிய அதிகாரிகள் அவர்களின் ஆவணங்கள் போலியானவை என்பதைக் கண்டுபிடித்து, பின்னர் அவர்களை நாடு கடத்தினர். முக்கிய சந்தேக நபராக மாலிக் வகாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது குஜ்ரன்வாலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலிக் வகாஸ் ‘கோல்டன் ஃபுட்பால் ட்ரையல்’ என்ற கால்பந்து கிளப்பைப் பதிவு செய்ததாகவும், அந்தக் குழுவின் வீரர்களைப் போல செயல்பட பயிற்சி அளித்ததாகவும் தெரியவந்திருக்கிறது.
ஆள்கடத்தல் விவகாரமாக இருக்கும் என சந்தேகிக்கும் விசாரணை அமைப்புகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.