AP25260527008111

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் விளையாடியது.

வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பால் ஸ்டிரிலிங் மற்றும் ராஸ் அடாய்ர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ஸ்டிரிலிங் 22 பந்துகளில் 34 ரன்கள் (ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), ராஸ் அடாய்ர் 25 பந்துகளில் 26 ரன்கள் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின், ஹாரி டெக்டார் மற்றும் லோர்கான் டக்கர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். லோர்கான் டக்கர் 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ஹாரி டெக்டார் 36 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான், லியம் டாஸன் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் அதிரடியாக 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன் பின் களமிறங்கியவர்களில் ஜேக்கோப் பெத்தேல் (24 ரன்கள்), சாம் கரண் (27 ரன்கள்), டாம் பண்டான் (11 ரன்கள்) எடுத்தனர்.

அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்ப்ரேஸ் மற்றும் கிரஹாம் ஹியூம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹாரி டெக்டார் மற்றும் கேரத் டெலானி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

England won the first T20I against Ireland by 4 wickets.

இதையும் படிக்க: 102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest