
அறிவோம் ஆலயம் :
இங்கு மூலவர் அருள்மிகு ராமநாதசுவாமி. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீபர்வதவர்த்தினி. இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று இங்கு இருக்கும் அபூர்வ தீர்த்தங்கள்.
கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் என அவசியம் நீராட வேண்டிய புண்ணிய தீர்த்தங்கள் இங்கே உள்ளன.
எப்போதும் சுற்றுலாப்பயணிகள் நிறைந்திருக்கும் திருத்தலம் ராமேஸ்வரம். மேலும் ஆடி, புரட்டாசி, தை, மாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாள்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கானவர்கள் இங்கே கூடுவர்.
அப்படிப்பட்ட பரபரப்பான தலத்தில் எப்படி முறையாக தரிசனம் செய்வது என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இப்படித்தான் தரிசனம் செய்ய வேண்டும்
ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும். பிறகு, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராட வேண்டும்.
நீராடி முடித்ததும் அப்படியே ஈரத்துணியோடு சாமி தரிசனம் செய்யச் செல்லக் கூடாது. உலர்ந்த துணிகளை மாற்றிக்கொண்டு பிறகு சாமி தரிசனம் செய்யச் செல்ல வெண்டும்.
கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக சென்றவுடன், நந்தி மண்டபத்திற்கு இடது பக்கமாக இருக்க கூடிய மஹாகணபதி கோயில் கொண்டுள்ளார். முதலில் அவரை வணங்க வேண்டும்.
அவருக்கு வலது பக்கம் வள்ளி, தேவசேனா சமேத முருகன் சந்நிதி கொண்டருள்கிறார். இவர்களை வணங்கிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
முதலில் இங்கு கோயில்கொண்டுள்ள காசிவிஷ்வநாதரைத்தான் இங்கே வழிபட வேண்டும். ராமர் பிரம்மஹத்தி தோஷம் தீர சிவபூஜை செய்ய அனுமனை காசிக்கு அனுப்பி இரண்டு சிவலிங்கங்ளைக் கொண்டுவர அனுப்பினார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமன் லிங்கத்தைக் கொண்டு வராததால் சீதாபிராட்டி மணலில் பிடித்த லிங்கத்திற்குப் பூஜை செய்து வழிபட்டார் ராமர்.
அனுமனின் கோபமும் அன்னையின் கருணையும்
லிங்கத்துடன் வந்த அனுமன் கோபமடைந்து மணல் லிங்கத்தைத் தன் வாலால் கட்டி இழுக்க முயன்றார். ஆனால் அதை அசைக்கக் கூட முடியவில்லை. சீதாப்பிராட்டி உருவாக்கிய மணல் லிங்கம்தான் ராமநாதசுவாமியாக இங்கே காட்சிதருகிறார்.
அனுமன் சீதாவின் திருக்கரத்தின் வலிமையை அறிந்து வருந்தினார். கோபம் தணிந்தார். அன்னையும் கருணையோடு அனுமனுக்கு ஆசி புரிந்தார்.
அனுமனின் மேற்கொண்ட முயற்சி வீணாகக் கூடாது என்று ராமச் சந்திரமூர்த்தி அனுமனின் லிங்கத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்யச் சொல்லி தினமும் அனுமனின் லிங்கத்துக்கே முதல் வழிபாடு என்று கூறினார்.
அவ்வாறு முதல் வழிபாடு பெறும் ஈசனே காசி விஸ்வநாதர். அம்பிகைக்கு விசாலாட்சி என்பது திருநாமம். ஸ்ரீராமரின் வாக்குப்படி காசி விஸ்வநாதரை வழிபட்ட பின்புதான் ராமநாதசுவாமியையும் அம்பாள் பர்வதவர்த்தினியையும் வழிபட வேண்டும்.
அதன் பிறகு தட்சிணாமூர்த்தியை தரிசிக்க வேண்டும். கோஷ்டத்தில் அருளும் லிங்கோத்பவரை வணங்க வேண்டும்.

கரையாத உப்பு லிங்கம்
அதற்கு நேர் எதிராக அமைந்துள்ள உப்பு லிங்கத்தை வழிபட வேண்டும். இந்த லிங்கம் பிரதிஷ்டையான சரித்திரம் சுவாரஸ்யமானது.
‘சீதாபிராட்டி பிடித்தது மண்லிங்கமே கிடையாது. ஒரு மண் லிங்கம் எப்படி இவ்வளவு உறுதியாக இருக்கும்’ என அந்த காலத்தில் சிலர் தர்க்கம் பண்ணினர்.
அவர்களுடைய தர்க்கத்திற்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக பாஸ்கர ராயர் என்பவர் அம்பாளை வேண்டிக்கொண்டு உப்பினால் லிங்கத்தை வடிவமைக்கிறார்.
அந்த லிங்கத்திற்கு குடம் குடமாக அபிஷேகம் செய்யுமாறு தர்க்கம் செய்தவர்களிடம் கூறினார். அவர்கள் எவ்வளவு அபிஷேகம் செய்தும் கடலளவு நீரால் அபிஷேகம் செய்தும் அந்த உப்புலிங்கம் கரையவே இல்லை.
சாதாரண மனிதனான நானே அம்பாளை நினைத்து செய்த உப்பு லிங்கத்தையே உங்களால் கரைக்க முடியவில்லை என்றால் சக்தியே உருவாக்கிய லிங்கம் எப்படிக் கரையும் என அவர்களிடம் கேட்டார்.
அவர்கள் தங்கள் பிழையை அறிந்து வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டனர். அவ்வாறு பாஸ்கர ராயர் உருவாக்கிய உப்பு லிங்கத்தை வணங்க வேண்டும்.
தர்பார் மண்டபத்திற்குள் பிரதட்சணமாக வந்து கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டுவிட்டு அம்பாளை தரிசனம் செய்து சந்நிதியைச் சுற்றிவந்து சந்தான சௌபாக்கிய கணபதியை வணங்க வேண்டும்.
அதன் பின்னர் முக்கியமாக இங்கே தரிசிக்க வேண்டியவர் பள்ளிகொண்ட பெருமாள். அதிலும் பெருமாள் நம்மைப் பார்க்கும் வகையில் இல்லாமல் வானத்தை நோக்கிப் பார்த்து ஓய்வு எடுத்தபடி திருக்காட்சி தருகிறார்.
ராம அவதாரத்தின் நோக்கம் ராவணனை சம்ஹாரம் செய்வது. அதை முடித்து இங்கே பெருமாள் ஓய்வு கொள்வதாக ஐதிகம்.
பெருமாளை தரிசித்து விட்டு மூன்றாம் பிராகாரத்திற்குள் சென்று பிதுர்களுக்குண்டான மோட்ஷத்தை தரக்கூடிய சேதுமாதவரை வழிபட வேண்டும்.
அதனை முடித்து அருகில் உள்ள லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய வேண்டும். மூன்றாம் பிராகாரத்தில் இருந்து இரண்டாம் பிராகாரத்திற்கு உள்ளே நுழைந்து அங்கே உள்ள பாதாள பைரவர் சந்நிதிக்குச் சென்று தரிசித்து விட்டு, மீண்டும் மூன்றாம் பிராகாரத்திற்கு வந்து நடராஜர் சந்நிதியான ருத்ராட்ச மண்டபத்திற்கு சென்று வழிபட்டுவிட்டு, பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியை அடைய வேண்டும்.

ராமேஸ்வரம் கோயிலின் நான்கு கோபுரங்களின் திசைகளில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயில், மகா உஜ்ஜயினி காளி, துர்க்கை அம்மன், நம்புநாயகி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களின் ஆலயஙக்ள் உள்ளன. அவற்றையும் தரிசித்தால் மிகுந்த பலன்கள் கிடைக்கும்.
தினமும் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு உச்சி காலை பூஜை முடிந்த பிறகு சாத்தப்படுகிறது. பின்னர் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு பள்ளி அறை பூஜை முடிந்து 8.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
வாழ்வில் ஒருமுறையேனும் ராமேஸ்வரம் சென்று நம் முன்னோர்களை நினைத்து சமுத்திரத்தில் புனித நீராடி ராமநாத சுவாமியை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
பிரிந்திருக்கும் கணவன் மனைவி விரைவில் கூடுவர். திருமண வரமும் கைகூடும். இங்குள்ள சந்தான சௌபாக்கிய கணபதியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த புரட்டாசி மாதத்தில் ராமேஸ்வரம் சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாய் மலரும்.