
தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த பொறியாளரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
சென்னையை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூரில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி (58). வேளச்சேரியில் உள்ள அரசு நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜூலை 30-ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க முயன்றிருக்கிறார்.

ஆனால் பணம் வரவில்லை. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர், பணத்தை எடுப்பதற்கு உதவி செய்வதாகக் கூறி, தமிழ்ச்செல்வியிடம் ஏ.டி.எம் அட்டையை வாங்கியிருக்கிறார். அவர் முயன்றும் பணம் வரவில்லை.
பிறகு அவர் ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அன்று இரவே இரும்புலியூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றிலிருந்து நான்கு முறை ரூ.10,000 எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச் செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, ஏ.டி.எம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திம்மராயப்பா என்ற நபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை அளித்த தகவலின் படி, “புகார் கொடுத்த தமிழ்ச்செல்வி, இந்த நபர்தான் ஏ.டி.எம் மையத்தில் இருந்ததாக திம்மராயப்பாவை அடையாளம் காட்டினார்.
அதன்பிறகு அவரைக் கைது செய்தோம். பொறியியல் பட்டதாரியான திம்மராயப்பா, ஐ.டி நிறுவனம் ஒன்றில் ஊழியராகவும் பிறகு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்ததாக தெரிகிறது.

ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் வராததால் தமிழ்ச்செல்வியிடம் இருந்து ஏ.டி.எம் அட்டையை அந்த நபர் வாங்கியுள்ளார். பிறகு அவரது அட்டைக்குப் பதிலாக வேறு அட்டையை மாற்றிக் கொடுத்துள்ளார்.
மிக எளிதாகவே இதனை அவர் செய்துள்ளார். அதன் பிறகு தமிழ்ச்செல்வியின் வங்கிக் கணக்கில் மொத்தமாக ரூ.80,000 எடுத்துள்ளார். இதேபோல், திண்டுக்கல், பவானி ஆகிய பகுதிகளிலும் மோசடி செய்துள்ளார்.
இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கைதான நபருக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகள் தெரியும் என்பதால் ஏமாற்றுவது எளிதாக இருந்துள்ளது.
வட தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளை மட்டும் இலக்காக வைத்து ஏ.டி.எம் மோசடிகளில் ஈடுபட்டு வந்த திம்மராயப்பா மீது, அதிக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வங்கி குறித்தும் ஏ.டி.எம் அட்டைகள் குறித்தும் சரிவர புரிதல் இல்லாத நபர்களை இலக்காக வைத்து இப்படியொரு மோசடியில் திம்மராயப்பா தொடர்ந்து ஈடுபடுகிறார்.
தொடர்ந்து விசாரித்ததில், கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழந்த திம்மராயப்பா, தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
திம்மராயப்பாவிடம் 15 ஆயிரம் ரொக்கமும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம் அட்டைகளையும் பறிமுதல் செய்திருக்கிறோம்.” என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.