nirmala

தாமரைக் கட்சியில் தற்போதைய தலைவர் அணி… மாஜி அணி என ஏற்கெனவே பல அணிகள் இருக்கின்றன. அதில், மற்றொரு புதிய அணி வேகமாக பவருக்கு வந்திருக்கிறதாம். அண்மையில், கொங்கு மண்டலத்திலிருந்து நாட்டின் உயர் பதவிக்குச் சென்றிருக்கும் இனிஷியல் பிரமுகரின் அணிதான் அதுவாம். ஏற்கெனவே மேதகு பொறுப்புக்குச் சென்றபோதும், கட்சியில் அவரது தலையீடு அதிகமாகவே இருந்ததாம். தற்போது உயரிய பொறுப்புக்குச் சென்றதால், இனி அவர் அரசியலில் தலையிட மாட்டார் என்று எண்ணிக்கொண்டிருந்தனர் தாமரைக் கட்சியினர். ஆனால், அவருக்குப் பொறுப்பு கொடுத்ததே அரசியலுக்காகத்தான் என்பதை நிரூபிக்கும்விதமாக, மாநில அரசியல் குறித்த விவரங்களைக் கேட்டிருக்கிறாராம் அந்த இனிஷியல் பிரமுகர். அதோடு, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான பதவிகளை வாங்கிக் கொடுத்துவருகிறாராம். அவர்கள் மூலம் தமிழகத்தில் தனி லாபி செய்யத் திட்டமிட்டுவருகிறாராம், அந்த இனிஷியல் பிரமுகர். இந்த டீமை வழிநடத்தும் பொறுப்பு, கொங்கு பெண் நிர்வாகிக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்!

சூரியக் கட்சியின் டெல்லிப் பிரதிநிதிகள் சிலர், தாமரைக் கட்சியின் கொள்கை, சித்தாந்தங்களுக்கு எதிராகக் கடுமை காட்டிப் பேசினாலும், உள்ளுக்குள் ஜாலியாக உறவாடுகிறார்களாம். தாமரைப் புள்ளிகளோடு தொழில்ரீதியிலான நட்புறவிலும் இருக்கிறார்களாம். இதனால், கட்சியின் அடிப்படையே கேள்விக்குறியாகும் நிலைக்குப் போயிருப்பதால், தாமரைக் கட்சியின் சீனியர்களோடு தொழில்ரீதியிலான நட்புறவில் இருக்கும் டெல்லிப் பிரதிநிதிகளை நோட்டம்விட முடிவெடுத்திருக்கிறதாம் சூரியக் கட்சித் தலைமை. எந்தெந்தப் பிரதிநிதிகள், யாரோடு நட்புறவில் இருக்கிறார்கள் என்பதை அறிய, தனியார் உளவு ஏஜென்சியைக் களமிறக்கியிருக்கிறதாம். இதையறிந்த டெல்லிப் பிரதிநிதிகள், ‘தலைமையும்தான் தாமரைப் புள்ளிகளோடு உறவாடிக்கொண்டிருக்கிறது. நாம் உறவாடினால் மட்டும் தவறா..?’ என்று முணுமுணுக்கிறார்களாம் லாஜிக்கோடு!

தீயணைப்புத்துறையில், ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்தையும் தலைமை அலுவலகத்திலிருந்து தொடர்புகொள்ள ஏதுவாக, வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ‘எந்த நிலையத்துக்கு, எத்தனை வாக்கி டாக்கிகள் கொடுக்கப்பட்டன..?’ என்பது குறித்த எந்த விவரமும் தலைமை அலுவலகத்தில் முறையாகப் பராமரிக்கப்படவில்லையாம். இதனால், தலைமை அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு நிலையமாகத் தொடர்புகொண்டு, `உங்ககிட்ட எத்தனை வாக்கி டாக்கி இருக்கு… அதுல எத்தனை பயன்பாட்டுல இருக்கு… உங்களுக்கு எப்போ அதைக் கொடுத்தாங்க?’ போன்ற விவரங்களைக் கேட்டிருக்கிறார்களாம். ‘ஏற்கெனவே, தீயணைப்புத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு யூனிஃபார்ம், ஷூ உள்ளிட்டவை தட்டுப்பாடாக இருக்கின்றன. புதிதாகப் பணிக்குச் சேருபவர்கள், தங்களுடைய சொந்தப் பணத்தில்தான் சீருடைகளை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், வாக்கி டாக்கி விவகாரமும் அதில் சேர்ந்திருக்கிறது. இந்த அளவுக்கு இந்தத் துறை மோசமானதற்கு, இதற்கு முன்பிருந்த சில அதிகாரிகள்தான் காரணம்’ என்கிறார்கள் விவரப்புள்ளிகள்!

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பை ஒட்டி, சென்னையில் நடந்த கூட்டத்தில், ஒரு விளக்கக் கையேட்டை வெளியிட்டிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்தக் கையேட்டை தமிழக பா.ஜ.க-வின் 67 மாவட்ட அமைப்புகளுக்கும் அனுப்பி, மண்டலவாரியாக பொதுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கச் சொல்லியிருக்கிறதாம் பா.ஜ.க மேலிடம். ‘சொல்லிக்கொள்ளும்படியாக நமக்கும் கட்டமைப்பு இருக்க வேண்டும். விரைந்து 25 அணிகளின் நிர்வாகிகள் நியமனங்களை முடித்து, அவர்களைத் தேர்தல் களத்தில் இறக்குங்கள்…’ என்று அமித் ஷா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அடுத்த மாத இறுதிக்குள் அணிப் பொறுப்பாளர்கள் நியமனங்களை முடிக்க வேகம் காட்டுகிறதாம் தமிழக பா.ஜ.க. ‘தமிழகத்தில் தனித்தே போட்டியிட்டால்கூட, பத்து சதவிகித வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும்’ என்ற இலக்கை நிர்ணயித்திருக்கிறதாம் டெல்லித் தலைமை. ஆனால், ‘களப்பணி செய்யக்கூடிய அளவில் சரியான நிர்வாகிகள் கிடைக்கவில்லையே…’ என்று புலம்புகிறார்கள் கமலாலய வட்டாரத்தில்!

கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆட்சிக்கு வர வேண்டும் என்று கோயில் கோயிலாக அலைந்து வழிபாடு மேற்கொண்டார் சூரியக் கட்சித் தலைமையின் உறவுப்புள்ளி. அவரது பாணியிலேயே, இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் இலைக் கட்சித் தலைமையின் உறவுப்புள்ளியும் கோயில் கோயிலாகச் சென்று வழிபாடு செய்கிறாராம். அதன்படி, கும்பகோணம் பகுதிகளிலுள்ள முக்கியக் கோயில்களில் யாகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டிருக்கிறார். சில ரகசிய பூஜைகளும், நேர்த்திக்கடன்களும், பரிகாரங்களும் நடப்பதால், இந்த விவகாரம் வெளியில் தெரியக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்களாம். இதற்கான ஏற்பாடுகளை, கும்பகோணம் கட்சி நிர்வாகி ஒருவர்தான் செய்துகொடுக்கிறாராம். கும்பகோணத்தை முடித்துவிட்டு, அடுத்தபடியாக அறுபடை வீடுகளுக்கும் நேரில் சென்று சிறப்பு பூஜைகளை செய்யவிருக்கிறாராம் அந்த உறவுப்புள்ளி!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest