
கல்கி ஏடி2898 இரண்டாம் பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் இருக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குந்ர அஸ்வின் நாக் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், கமல் ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதன் அடுத்த பாகத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் விஜயாந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், “ கல்கி 2898 ஏடி போன்ற திரைப்படத்தில் நடிக்க ஒத்துழைப்பும் சில விஷயங்களும் தேவைப்படுகின்றன. நீண்ட ஆலோசனைக்குப் பின், தீபிகாவும் கல்டி ஏடி குழுவும் தனித்தனி பாதையில் செல்ல முடிவு செய்திருக்கிறோம்.
இதனால், தீபிகா படுகோன் கல்கி 2898 ஏடியின் இரண்டாம் பாகத்திலிருந்து நீக்கப்படுகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். அவருடைய எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளனர்.
பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா நீக்கப்பட்ட நிலையில், தற்போது பிரம்மாண்ட தெலுங்கு படமான கல்கி ஏடியிலிருந்தும் நீக்கப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!